கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இடைக்கால அதிபராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்கே!

By காமதேனு

இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச பதவி விலகிய நிலையில், அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார்.

கோத்தபய ராஜபக்ச ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதனை ஏற்றுக்கொண்டதாகவும் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன இன்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கையில் இடைக்கால பொறுப்பு அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். அவருக்கு இலங்கையின் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

கடந்த ஜூலை 9 -ம் தேதி இலங்கை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியதை அடுத்து, கோத்தபய ராஜபக்ச அங்கிருந்து தப்பியோடினார். அதன்பிறகு தனது பதவியை ராஜினாமா செய்யாமலேயே புதன்கிழமை அதிகாலை மாலத்தீவுக்கு தப்பிய கோத்தபயவுக்கு அந்த நாடு அடைக்கலம் தரவில்லை. எனவே அவர் நேற்று தனி விமானம் மூலமாக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். சிங்கப்பூரில் இருந்தபடி மின்னஞ்சல் மூலமாக கோத்தபய ராஜபக்ச நேற்று ராஜினாமா தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பினார். இதனை சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் வரும் ஜூலை 19-ம் தேதி அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பெறப்படும் என்றும், ஜூலை 20-ம் தேதி அதிபர் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெறும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE