கனடாவில் அவமதிப்புக்குள்ளான காந்தி சிலை: வேதனை தெரிவித்த இந்தியா

By காமதேனு

கனடாவின் ஒன்டாரியோவின் ரிச்மண்ட் ஹில் நகரில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை அவமதிக்கப்பட்டதற்கு இந்தியா தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளது.

ஒன்டாரியோவின் யாங்கே ஸ்ட்ரீட் மற்றும் கார்டன் அவென்யூ பகுதியில் விஷ்ணு கோயில் அருகே 5 மீட்டர் உயரமுள்ள காந்தி சிலை புதன்கிழமை மதியம் 12.30 மணியளவில் அவமதிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. ‘ரேப்பிஸ்ட்' மற்றும் 'காலிஸ்தான்’ உள்ளிட்ட கிராஃபிக் வார்த்தைகள் காந்தி சிலையின் பீடத்தின் மீது எழுதப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், "ரிச்மண்ட் ஹில் விஷ்ணு கோவிலில் உள்ள மகாத்மா காந்தி சிலை அவமதிக்கப்பட்டதில் நாங்கள் வேதனையடைந்துள்ளோம். இந்த வெறுக்கத்தக்க காழ்ப்புணர்ச்சியானது கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் உணர்வுகளை ஆழமாக காயப்படுத்தியுள்ளது. இந்த வெறுப்பு குற்றத்தை விசாரிக்க கனட அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தது.

ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம், இந்திய சமூகத்தை பயமுறுத்த முயலும் இந்த வெறுப்பு குற்றத்தால் இந்தியா மிகவும் வேதனையடைந்துள்ளது. இதுபற்றி விசாரணை செய்து குற்றவாளிகள் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய கனட அரசாங்கத்தை இந்தியா அணுகியுள்ளது என்று கூறியுள்ளது.

இது தொடர்பாக பேசிய யார்க் பிராந்திய காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டபிள் ஏமி பௌட்ரூ," இனம், தேசியம், மொழி, நிறம், மதம், வயது, பாலினம், பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு போன்றவற்றின் அடிப்படையில் பிறரைப் அவமதிப்பவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள். வெறுப்புக் குற்றங்கள் மற்றும் வெறுப்புச் சார்பு சம்பவங்கள் அனைத்தின் மீதும் நாங்கள் தீவிர நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE