‘கோத்தபய எங்கள் நாடு வழியாகச் செல்கிறார்... எங்கு செல்கிறார் எனத் தெரியாது!’ - மாலத்தீவு அரசுத் தரப்பு விளக்கம்

By காமதேனு

இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்யாமலேயே, மாலத்தீவுக்கு அந்நாட்டின் விமானப் படை உதவியுடன் இன்று காலை தப்பிச் சென்றிருக்கிறார் கோத்தபய ராஜபக்ச. அவருடன் அவரது மனைவியும், இரண்டு பாதுகாவலர்களும் விமானத்தில் மாலத்தீவுக்குச் சென்றிருப்பதை இலங்கை விமானப் படை உறுதிப்படுத்திவிட்டது. இந்நிலையில், கோத்தபய தங்கள் நாடு வழியாகப் பயணிக்கிறார் என்பதுதான் நிதர்சனம் என அந்நாட்டின் அரசு அதிகாரி ஒருவர் ‘தி இந்து’ ஆங்கில இதழிடம் தெரிவித்திருக்கிறார்.

கோத்தபயவின் மாலத்தீவு வருகை தொடர்பாகப் பரபரப்பாகப் பேசப்படும் நிலையில், இந்தத் தகவலை அவர் தெரிவித்திருக்கிறார். கோத்தபய எங்கு செல்கிறார் எனும் கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து, கோத்தபய பயணத்தின் இறுதி இலக்கு எது என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.

கோத்தபயவுக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துவிட்டது. அதேபோல், இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல கோத்தபயவுக்கோ அவரது தம்பியும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சவுக்கோ உதவவில்லை என்று இந்தியா மறுத்திருக்கிறது.

நஷீத் வரவேற்பு?

கோத்தபய சென்ற விமானம், அதிகாலை 3.07 மணி அளவில் வெலனா சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்ததாக ‘டெய்லி மிர்ரர்’ தெரிவித்திருக்கிறது. தலைநகர் மாலே அருகில் உள்ள ஹுல்ஹுலே தீவில் இந்த விமான நிலையம் இருக்கிறது. கோத்தபயவின் வருகையையொட்டி, மாலேயில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மாலத்தீவின் முந்தைய அதிபரும் தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகருமான முகமது நஷீத், விமான நிலையத்தில் கோத்தபயவை வரவேற்று அழைத்துச் சென்றதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. எனினும் அது குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

முகமது நஷீத்

இலங்கை அரசியல் தலைவர்களுடன் நெருக்கமான உறவைப் பேணுபவர் முகமது நஷீத். இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சமடைந்த நிலையில், புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்கே, இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி உதவிகளைத் திரட்டும் பணியை ஒருங்கிணைப்பும் பொறுப்பை முகமது நஷீதிடம்தான் கொடுத்தார்.

இலங்கைக்கும் மாலத்தீவுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் உண்டு. மாலத்தீவின் அரசியல் நெருக்கடிகளிலிருந்து தப்பி, ஓடிவரும் தலைவர்களுக்கு இலங்கை தஞ்சமளித்த வரலாறு உண்டு. 10 ஆண்டுகளுக்கு முன்பு, மாலத்தீவில் வன்முறை வெடித்த நிலையில், முகமது நஷீதும் அவரது மனைவி மற்றும் மகள்களும் கொழும்புவுக்குத் தப்பிச் சென்றனர். “முகமது நஷீத் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பில் அதிபர் (மகிந்த) ராஜபக்ச அக்கறை கொண்டிருக்கிறார்” என அப்போது இலங்கை அரசின் செய்தித்தொடர்பாளர் கூறியிருந்தார்.

அதிபரிடம் பேசிய நஷீத்

அதற்குக் கைமாறாக, கோத்தபயவை மாலத்தீவில் அனுமதிக்குமாறு அதிபர் இப்ராஹிம் சோலிஹிடம் தனிப்பட்ட முறையில் முகமது நஷீத் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்படியே மாலத்தீவில் தரையிறங்க கோத்தபய சென்ற விமானத்துக்கு அனுமதிவ் வழங்கப்பட்டது.

இதற்கிடையே, மாலத்தீவுக்கு கோத்தபய சென்றதை அந்நாட்டு மக்கள் விரும்பவில்லை எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மாலத்தீவின் அதிபர் இப்ராஹிம் சோலிஹின் மாளிகை அருகே அந்நாட்டு மக்களும், அங்கு வசிக்கும் இலங்கை மக்களும் திரண்டு, கோத்தபயவை வெளியேற்றுமாறு போராட்டம் நடத்திவருவதாக ‘மால்டிவியன் டிவி’ எனும் செய்தி சேனலின் தலைவர், ‘டெய்லி மிர்ரர்’ இதழிடம் தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE