‘பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகவேண்டும்’ - கொந்தளிக்கும் இலங்கை எதிர்க்கட்சி தலைவர்!

By காமதேனு

இலங்கை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை முழுவதும் கடும் பதற்றம் நீடிக்கும் நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அழைப்பு விடுக்கும் எந்த கூட்டத்திலும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார். மேலும், சட்டப்பூர்வமற்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் உள்ளார் எனவும் அவர் கூறினார்.

இலங்கை முழுவதும் பல்வேறு நகரங்களும் போர்க்களமாக மாறியுள்ளதால் அனைத்து பகுதிகளிலும் பதற்றம் நீடிக்கிறது. கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைக்கும் போராட்டக்காரர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவும் போராடத்தொடங்கியுள்ளனர்.

இன்று காலையில் இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், தடுப்புகளை அடித்து நொறுக்கி உள்ளே நுழைந்தனர். இதனால் அதிகாரப்பூர்வ மாளிகையை விட்டு தப்பியோடிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பத்திரமுல்லையில் உள்ள ராணுவ தளத்தில் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கப்பல் மூலமாக குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ள கோத்தபய ராஜ்பக்சவுக்கு சொந்தமான பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கடற்படை கப்பலில் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தடுப்புகளை அடித்து நொறுக்கி உள்ளே நுழைந்தனர். தற்போது இலங்கை அதிபர் மாளிகை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது, ராணுவத்தினரும் போராட்டக்காரர்களுடன் கைகோர்த்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE