இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தப்பியோட்டம் - தீவிரமடையும் மக்கள் போராட்டம்

By காமதேனு

இலங்கை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் சுற்றிவளைத்த நிலையில் கோத்தபய ராஜபக்ச தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், தடுப்புகளை அடித்து நொறுக்கி உள்ளே நுழைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் அதிகாரப்பூர்வ மாளிகையை விட்டு தப்பியோடிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பத்திரமுல்லையில் உள்ள ராணுவ தளத்தில் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இன்று கொழும்புவில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என போராட்டக்காரர்கள் அறிவித்திருந்ததால் நேற்று காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை இலங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. ஆனால் இன்று ஊரடங்கு உத்தரவையும் மீறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து போராட்டக்காரர்கள் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். ராணுவத்தினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியும் மக்கள் அதனை மீறி அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். போராட்டக்காரர்களின் ஒற்றைக்கோரிக்கை ‘ கோத்தபய ராஜபக்ச பதவி விலகவேண்டும்’ என்பதாக இருந்தது.

இலங்கை தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொருட்கள், எரிபொருள், மருந்து பொருட்கள் மற்றும் விவசாய இடுபொருட்கள் பற்றாக்குறையால் நாட்டின் 22 மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோத்தபய ராஜபக்சவின் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் நாட்டினை படுபாதாளத்தில் தள்ளிவிட்டதாக குற்றம்சாட்டி அவரை ராஜினாமா செய்யக் கோரி பல மாதங்களாக கோத்தபயவின் கொழும்பு அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் முகாமிட்டுள்ளனர். கோத்தபய பதவி விலக வலியுறுத்தி இன்று மிகப்பிரமாண்ட பேரணிக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்.

போராட்டம் தீவிரமடையும் என உளவுத்துறை எச்சரித்த நிலையில் நேற்று இரவே கோத்தபய ராஜபக்ச ராணுவ தலைமையகத்துக்கு தப்பி சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE