ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே(67), இன்று காலை நரா நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். ஜப்பானே துயரத்தில் மூழ்கியிருக்கிறது. ஜப்பானின் நட்பு நாடான இந்தியாவும் அவரது மறைவுக்கு தேசிய துக்கம் அனுஷ்டிப்பதாக அறிவித்திருக்கிறது. ஏற்ற இறக்கங்கள், விமர்சனங்கள், வெற்றி தோல்விகள், சர்ச்சைகள் எனப் பலவற்றையும் கடந்து இறுதி மூச்சுவரை அரசியலுக்காகத் தன்னை அர்ப்பணித்த தலைவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார் ஷின்ஸோ அபே. அவரது வாழ்க்கையிலிருந்து சில முக்கியப் பகுதிகள்...
ஜப்பான் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஷின்ஸோ அபே. 1954 செப்டம்பர் 21-ல் டோக்கியோவில் சிந்தாரோ - யோகோ அபே தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அவரது தாய்வழித் தாத்தா (யோகோவின் தந்தை) நோபுசுகே கிஷி 1950-களில் ஜப்பானின் பிரதமராகப் பதவிவகித்தவர். இரண்டாம் உலகப்போரின்போது போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவால் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், போர்க்குற்ற விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பே அவர் விடுதலை செய்யப்பட்டார். சிறிய கட்சிகளை இணைத்து தாராளவாத ஜனநாயகக் கட்சியின் (எல்டிபி) கட்சியை உருவாக்கியது அவர்தான். போருக்குப் பின்னர் அமெரிக்காவுக்கு ஆதரவான சூழலை ஜப்பானில் ஏற்படுத்த அவர் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டதாக விமர்சனங்கள் உண்டு.
ஷின்ஸோ அபேயின் தந்தை சிந்தாரோ அபேயும் அரசியல் பின்னணி கொண்டவர். ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். தாராளவாத ஜனநாயகக் கட்சியின் (எல்டிபி) முக்கியத் தலைவராக இருந்தவர். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அந்தக் கட்சிதான் ஜப்பானை நீண்டகாலமாக ஆட்சி செய்துவருகிறது. இடையில் நான்கு ஆண்டுகள் மட்டும்தான் அக்கட்சி அல்லாத ஆட்சியை ஜப்பான் சந்தித்தது. 1990-களில் அக்கட்சியில் நிலவிய அரசியல் குழப்பங்கள் காரணமாக 1993 முதல் 1994 வரை, ஜப்பான் புதிய கட்சி (Japan New Party) எனும் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அதுவும் தாராளவாத ஜனநாயகக் கட்சியிலிருந்து பிரிந்து மொரிஹிரோ ஹொஸோகாவா என்பவர் தொடங்கிய கட்சிதான். அந்தக் கட்சியின் ஆட்சி 1994-ல் முடிவுக்கு வந்தது. மொரிஹிரோ ஹொஸோகாவா பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
டோக்கியோவில் உள்ள செய்கேய் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படித்தார். பின்னர் அமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஓராண்டு காலம் அரசியல் அறிவியல் படிப்பைத் தொடர்ந்தார். எனினும் தாத்தா, தந்தை வழியில் உடனடியாக அவர் அரசியலுக்குள் வந்துவிடவில்லை. புகழ்பெற்ற கோபே ஸ்டீல் நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார். பின்னர் அரசியல் அவரை இயல்பாக இழுத்துக்கொண்டது. வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவிவகித்த தனது தந்தையின் உதவியாளராக, 1982-ல் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் ஷின்ஸோ அபே.
புகழ்பெற்ற மிட்டாய் தயாரிப்பு நிறுவனமான ‘மொரினாகா’ நிறுவனத்தின் முன்னாள் தலைவரின் மகளான அகியே மட்ஸுஸாகியை 1987-ல் திருமணம் செய்துகொண்டார் ஷின்ஸோ அபே. கணவருக்கு நிகராக அரசியல் அறிவும் பொது அறிவும் நிரம்பிய அகியே அவரது ஆட்சியின் முக்கிய விமர்சகராகவும் இருந்தார். நீண்டகாலம் ஆட்சிப் பொறுப்பை வகிக்கும் கட்சியின் தலைவர் என்றாலும், தனது கணவரின் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, தன்பாலின உறவாளர்களின் உரிமைகள் தொடர்பான விஷயங்களில் ஷின்ஸோ அபேயைவிடவும் முற்போக்கான பார்வையை வெளிப்படுத்தினார். துரதிருஷ்டவசமாக இருவருக்கும் இறுதிவரை குழந்தைப் பேறு வாய்க்கவில்லை.
முதன்முதலில் நாடாளுமன்றம்
1991-ல் சிந்தாரோ மரணமடைந்ததைத் தொடர்ந்து நேரடியாக அரசியலுக்குள் நுழையும் கட்டாயம் ஷின்ஸோ அபேவுக்கு ஏற்பட்டது. 1993-ல் யமகுச்சி தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்வுசெய்யப்பட்டார். படிப்படியாகத் தனது அரசியல் பயணத்தைக் கட்டமைத்துக்கொண்டார். 2000-ல் கட்சியின் துணைத் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அந்தக் காலகட்டத்தில் - வடகொரியாவின் அப்போதைய அதிபர் ஜிம் ஜோங் இல் (இன்றைய கிம் ஜோங் உன்னின் தந்தை) ஆட்சிக்காலத்தில், வட கொரிய ஏஜென்ட்களால் ஜப்பான் குடிமக்கள் கடத்தப்பட்டனர். அவர்களை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்க வட கொரியா சென்றிருந்தார் ஜப்பானின் அப்போதைய பிரதமர் ஜுனிகிரோ கொய்ஸுமி. அவருடன் ஷின்ஸோ அபேயும் சென்றிருந்தார். இருவரின் பெருமுயற்சியால் ஜப்பானியர்கள் ஐந்து பேர் மீட்கப்பட்டனர். பின்னாட்களில், பிரதமரான பின்னர், வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டலை எதிர்கொண்டு அதை முறியடிக்கும் நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டார்.
2006-ல் கட்சியின் தலைமைப் பொறுப்புடன், பிரதமர் பதவியும் ஷின்ஸோ அபேவுக்குக் கிடைத்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் ஜப்பானின் பிரதமரானது அதுவே முதல் முறை. எனினும், அவரது ஆட்சிக்கு எதிரான ஊழல் புகார்கள் பெரும் நெருக்கடியில் அவரைத் தள்ளின. ஏற்கெனவே பெருங்குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்த ஷின்ஸோ அபே, தனது உடல்நிலையைக் காரணம் காட்டி பதவிவிலகினார். இதையடுத்து அவரது கட்சியில் பல்வேறு குழப்பங்கள் உருவாகின. ஐந்து பிரதமர்கள் அடுத்தடுத்து பதவியேற்றனர். இதனால் ஜப்பானியர்கள் அக்கட்சி மீது அதிருப்தியடைந்தனர்.
2009 தேர்தலில் தாராளவாத ஜனநாயகக் கட்சி இரண்டாவது முறையாக ஆட்சியை இழந்தது. ஜப்பான் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த யுகியோ ஹடாயாமா பிரதமரானார். அதுவும் தாராளவாத ஜனநாயகக் கட்சியிலிருந்து பிரிந்து புதிதாக உருவானதுதான். அந்த ஆட்சியிலும் ஏகக் குழப்பங்கள்.
கூடவே, 2011-ல் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஜப்பானில் ஏற்பட்ட பெரும் பாதிப்புகள், ஃபுகுஷிமா அணு உலை விபத்து போன்ற பெரும் சிக்கல்களைக் கையாள முடியாமல் தவித்த ஜப்பான் ஜனநாயகக் கட்சி ஆட்சி மீதும் அரசியல் குழப்பங்கள் மீதும் அந்நாட்டு மக்கள் அதிருப்தியில் இருந்தனர். இப்படியான சூழலில் 2012 தேர்தலில் தாராளவாத ஜனநாயகக் கட்சிக்கே ஜப்பானியர்கள் பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெறச் செய்தனர். ஷின்ஸோ அபே மீண்டும் பிரதமரானார். அதன் பின்னர், 2020-ல் உடல்நிலையைக் காரணம் காட்டி தானாகப் பதவி விலகும் வரை அவரே பிரதமர் பதவியில் இருந்தார்.
அதன் பின்னரும், திரை மறைவிலிருந்து அரசை வழிநடத்தினார். அவருக்குப் பின்னர் யோஷிஹிடே சுகா பிரதமரானார். ஓராண்டுக்குப் பின்னர் அவரும் பதவி விலக நேர்ந்தது. அதன் பின்னர் சானே தகாய்ச்சி முதன்முதலாக ஜப்பானின் பெண் பிரதமராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சியில் அவருக்குப் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. ஷின்ஸோ அபேயின் ஆதரவு பெற்ற ஃபுமியோ கிஷிடாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
தனது ஆட்சிக்காலத்தில் ஜப்பான் பொருளாதாரத்தைக் கட்டமைப்பதில் மிகுந்த முனைப்பு காட்டினார் ஷின்ஸோ அபே. ‘அபேனாமிக்ஸ்’ (Abenomics) எனும் பெயரில் அவரது பொருளாதாரச் சீர்திருத்த முயற்சிகள் அழைக்கப்பட்டன. அவற்றில் சில சாதகமான விளைவுகளைத் தந்தன. சில முயற்சிகள் தோல்வி கண்டன. 2020-ம் ஆண்டுக்குள் 600 ட்ரில்லியன் டாலர் ஜிடிபி-யை எட்டுவதை இலக்காகக் கொண்டிருந்தார். ஆனால், அது நிறைவேறவில்லை.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற வல்லரசுகளுடன் முடிந்தவரை நட்புறவைப் பேண விரும்பினார் ஷின்ஸோ அபே. ட்ரம்ப், ஜி ஜின்பிங் போன்ற தலைவர்களுடன் நட்பு பாராட்டினார். இரண்டாம் உலகப்போரின்போது, அண்டை நாடுகளான தென் கொரியா, சீனா மீது ஜப்பான் படைகள் நிகழ்த்திய போர்க்குற்றங்களுக்காகப் பொது மன்னிப்பு கோர மறுத்தது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், ஜப்பானிய வரலாற்றில் மறக்க முடியாத தலைவராக நினைவுகூரப்படுவார் ஷின்ஸோ அபே!