ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

By வெ.சந்திரமோகன்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே (67), இன்று காலை துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 371 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நரா நகரில் இன்று காலை 11.30 மணி அளவில் யமாட்டோ சைடாய்ஜி ரயில் நிலையத்தின் முன்னே சாலையில் இன்று (ஜூலை 8) தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஷின்ஸோ அபே கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவரை நோக்கி ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டார். அவர் சுட்ட முதல் குண்டு குறி தவறியதாகவும், இரண்டாவது குண்டு ஷின்ஸோ அபே மீது பாய்ந்ததாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷின்ஸோ அபேயின் நெஞ்சுப் பகுதியின் இடதுபாகத்திலும், கழுத்துப் பகுதியிலும் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கி குண்டு பாய்ந்ததும் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சரிந்து விழுந்தார் ஷின்ஸோ அபே. அதிர்ச்சியடைந்த பாதுகாவலர்கள் ஓடிச் சென்று அவரைத் தூக்கினர். அவரது சட்டையில் ரத்தக் கறை படிந்திருந்தது. சுயநினைவிழந்து கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். நரா மாவட்டத்தில் உள்ள கஷிஹரா நகரில் உள்ள நரா மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அவர் கொண்டுசெல்லப்பட்டார் என அந்நாட்டின் தேசிய செய்தி ஊடகமான என்ஹெச்கே தெரிவித்திருக்கிறது.

அவர் சுடப்பட்ட காட்சி அடங்கிய காணொலிகள் சமூகவலைதளங்களில் வைரலாகியிருக்கின்றன.

தாக்குதல் நடத்தியவர் யார்?

ஷின்ஸோ அபேயைத் துப்பாக்கியால் சுட்ட நபரை பாதுகாவலர்கள் சுற்றிவளைத்தனர். அவர் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டார். அவரது பெயர் டெட்ஸுயா யமாகாமி எனத் தெரியவந்திருக்கிறது. நரா நகரைச் சேர்ந்த அவர், ஜப்பானிய கடற்படையின் தற்காப்புப் படையில் பணியாற்றி 2005-ல் அதிலிருந்து விலகியவர் என ஃபியுஜி டிவி செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சொந்தமாகத் தயாரித்த ஆயுதத்தைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை அவர் நடத்தியிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. ஜப்பானில் துப்பாக்கி வைத்துக்கொள்ள கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. துப்பாக்கி வாங்குவது என்பது மிகவும் கடினமான காரியம். இதனால் துப்பாக்கிச்சூடு தொடர்பான குற்றங்கள் மிகக் குறைவு என்பது கவனிக்கத்தக்கது.

டெட்ஸுயா யமாகாமி முதல் குண்டைச் சுட்டபோது அது ’பஸூகா’ பொம்மை துப்பாக்கியின் சத்தம் போல இருந்ததாகவும், பின்னர் சற்றே பின்வாங்கி இரண்டாவது முறை அந்த நபர் சுட்டதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர் ஒருவர் ஜப்பான் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.

துப்பாக்கியால் சுட்ட நபரின் நோக்கம் என்ன என உறுதியாகத் தெரியவில்லை எனப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்திருக்கிறார். ஷின்ஸோ அபேயால் விரக்தியடைந்ததாகத் தாக்குதல் நடத்திய டெட்ஸுயா யமாகாமி போலீஸாரிடம் தெரிவித்ததாக என்ஹெச்கே தெரிவித்திருக்கிறது. எனினும் அதுகுறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

நீண்டகாலப் பிரதமர்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பானின் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர் ஷின்ஸோ அபே. ஜப்பானில் நீண்டகாலம் பிரதமராகப் பதவிவகித்தவர் எனும் பெருமையும் அவருக்கு உண்டு. இந்தியாவுடனான நல்லுறவை வளர்த்ததில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. குவாட் அமைப்பின் மூலம் இந்தியாவுடன் நெருக்கமான உறவை அவர் பேணிவந்தார். புல்லட் ரயில் திட்டத்தை இந்தியாவில் தொடங்க அவர் முயற்சி எடுத்தார்.

உடல்நிலை மோசமானதால் 2020-ல் பதவிவிலகினார். அவரது கட்சியைச் சேர்ந்த ஃபுமியோ கிஷிடா பிரதமராகப் பொறுப்பெற்றார்.

தாராளவாத ஜனநாயக கட்சியின் முன்னாள் தலைவரான ஷின்ஸோ அபே, அந்நாட்டின் மேலவைக்கு நடக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றிக்கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நடந்தேறியிருக்கிறது.

மேலவைத் தேர்தலில் தாராளவாத ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய யமகாட்டா மாவட்டத்துக்குச் சென்றிருந்த பிரதமர் ஃபுமியோ கிஷிடா, தகவல் அறிந்ததும் உடனடியாக டோக்கியோவுக்கு விரைந்தார். ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர்கள் பலரும் உடனடியாக டோக்கியோ விரைந்தனர்.

கண்டனங்கள்

இந்தத் தாக்குதல், காட்டுமிராண்டித்தனமான மற்றும் தீயநோக்கம் கொண்டது எனப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கண்டனம் தெரிவித்திருக்கிறார். மிகக் கடுமையான வார்த்தைகளில் இந்தத் தாக்குதலைக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

“காட்டுமிராண்டித்தனமான இந்தச் செயலை எந்தக் காரணம் கொண்டும் பொறுத்துக்கொள்ள முடியாது. இதை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று தலைமை அமைச்சகச் செயலாளர் ஹிரோகாஸு மட்ஸுனோ தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, தைவான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். 2023-ம் ஆண்டுக்கான ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறவிருக்கும் நிலையில் அதுதொடர்பான கூட்டம் இந்தோனேசியாவின் பாலி நகரில் நடந்துவருகிறது. அதில் ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், ஷின்ஸோ அபே மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆழ்ந்த வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஷின்ஸோ அபே மீதான தாக்குதல் அதிர்ச்சியளிப்பதாகப் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் தெரிவித்திருக்கின்றனர்.

எப்படி இருக்கிறார் ஷின்ஸோ அபே?

ஷின்ஸோ அபேயின் உடல்நிலை குறித்து உறுதியான தகவல்கள் அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை. அவரது முக்கிய உறுப்புகள் செயலிழந்துவிட்டதாகவும், மாரடைப்பு ஏற்பட்டதாகவும் முதற்கட்டத் தகவல்கள் வெளியாகின. அவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தொடர்ந்து முயற்சி செய்துவருவதாகவும் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE