உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் நாட்டை சேர்ந்த துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற மாடல் அழகி தலிதா டோ வாலே ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்.
39 வயதான தலிதா டோ வாலே ஜூன் 30 அன்று உக்ரைன் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள கார்கிவ் நகரத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் இறந்தார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் தலிதாவைக் கண்டுபிடிக்க பதுங்கு குழிக்குச் சென்ற முன்னாள் பிரேசில் ராணுவ வீரர் டக்ளஸ் புரிகோவும் உயிரிழந்தார்.
ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட தலிதா டோ வாலே உலகெங்கிலும் பல நாடுகளில் மனிதாபிமானப் பணிகளில் பங்கேற்றுள்ளார். அவர் ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ்க்கு எதிராகப் போரிட்டு அதனை தனது யூடியூப் சேனலில் ஆவணப்படுத்தியவர். அந்த நேரத்தில் அவர் ஈராக்கின் சுதந்திர குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ஆயுதமேந்திய இராணுவப் படைகளான பீஷ்மர்காஸிடம் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றார்.