அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4-ல் (திங்கள்கிழமை) நடந்த கொடி அணிவகுப்பு கொண்டாட்டம் அந்நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டது. அந்த வகையில் இல்லினாய் மாநிலத்தின் சிகாகோ நகரின் புறநகர்ப் பகுதியான ஹைலேண்ட் பார்க்கில் நேற்று நடந்த அணிவகுப்பில் கலந்துகொண்ட மக்கள் மீது, அருகில் இருந்த கட்டிடத்தின் மாடியிலிருந்து ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். காயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்திருக்கிறது. சுதந்திர தினத்தன்று நடந்த இந்தக் கொடூரச் சம்பவம் அமெரிக்க மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
கொலையாளியின் கொடூர குணம்
இந்தச் சம்பவம் தொடர்பாக ராபர்ட் கிரிமோ எனும் 22 வயது வெள்ளையின இளைஞரைப் போலீஸார் பிடித்து விசாரித்துவந்தனர். முதலில் அவரை ‘பெர்சன் ஆஃப் இன்டெரஸ்ட்’ எனும் அடிப்படையில் பிடித்துவைத்திருந்த போலீஸார், பின்னர் அவரைக் கைதுசெய்தனர். அவர் மீது ஏழு கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
ராபர்ட் கிரிமோ தொடர்பாக வெளியாகும் செய்திகள் அவர் எந்த அளவுக்கு வன்முறை குணம் கொண்டவர் என்பதைக் காட்டுகின்றன. யூடியூப், ஸ்பாட்டிஃபை போன்ற சமூகவலைதளங்களில் அவர் வெளியிட்டிருந்த காணொலி மற்றும் ஒலிப் பதிவுகள் தற்போது நீக்கப்பட்டுவிட்டன. இணையத்தில் அதிகம் கவனம் ஈர்க்கும் நோக்கத்துடன் அவர் செயல்பட்டிருக்கிறார். பொதுமக்களை அவர் சுட்டுக்கொல்வது போலவும், அவரைப் போலீஸார் சுட்டுக்கொல்வது போலவும் அனிமேஷன் முறையில் தயாரிக்கப்பட்ட காணொலிகளை அவர் பகிர்ந்திருந்தார். முன்னாள் அதிபர் ட்ரம்ப்புக்கு ஆதரவாக நடந்த பேரணிகளில் அவர் பங்கேற்றிருந்ததும் தற்போது தெரியவந்திருக்கிறது.
இதற்கு முன்பும் போலீஸாரின் கண்காணிப்புக்குள்ளானவர் ராபர்ட் கிரிமோ. 2019-ல் தற்கொலை முயற்சி செய்தபோது அவரைப் போலீஸார் காப்பாற்றி எச்சரித்து சென்றனர். அவரிடம் இருந்த கத்திகளைப் பறிமுதல் செய்ய போலீஸார் சென்றிருந்தபோது அனைவரையும் கொலை செய்துவிடுவதாக அவர் மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பெற்றோரை இழந்த குழந்தை
ஹைலேண்ட் பார்க் படுகொலை சம்பவத்தில் பல துயரக் காட்சிகள் நிகழ்ந்ததைக் காணொலிப் பதிவுகள் பதிவுசெய்திருக்கின்றன. அந்த வகையில், அந்தச் சம்பவத்தில் தாய், தந்தை இருவரையும் இழந்த 2 வயதுக் குழந்தை ஏய்டனுக்கு நேர்ந்த துயரம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அந்தப் பாலகனின் பெற்றோர் கெவின் மெக்கார்த்தி மற்றும் இரினா மெக்கார்த்தி இருவரும் ராபர்ட் கிரிமோவின் துப்பாக்கிச்சூட்டில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வெறி பிடித்த நபரின் கொலைவெறிக்குப் பெற்றோர் இருவரையும் பறிகொடுத்த அந்தக் குழந்தை தன்னந்தனியாகத் தவழ்ந்து சென்ற காட்சி சமூகவலைதளங்களில் வைரலானது. சற்று நேரத்தில் அங்கிருந்தவர்கள் அந்தக் குழந்தையைப் பத்திரமாகத் தூக்கிச் சென்று போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீஸார் அக்குழந்தையின் தாத்தா - பாட்டியிடம் ஒப்படைத்தனர்.
தந்தையும் தாயும் இறந்துவிட்டதை அறியாத அந்தக் குழந்தையின் நிலை பலரையும் கலங்கச் செய்துவிட்டது. “அப்பாவும் அம்மாவும் சீக்கிரம் வருவார்கள்” என மழலை மொழியில் தனது தாத்தா - பாட்டியிடம் அந்தக் குழந்தை கூறியதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஏய்டனின் எதிர்காலத்துக்கு உதவ, மனிதாபிமானம் கொண்ட சிலர் நிதி திரட்டத் தொடங்கியிருக்கின்றனர். பல்வேறு காரணங்களை முன்னிட்டு நிதி திரட்டும் ’கோ ஃபண்ட் மீ’ (GoFundMe) இணையதளத்தில் அந்தக் குழந்தைக்காக நிதி திரட்ட பிரத்யேகப் பக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது.