ஒரே ஒரு வேட்பாளர்... ஒரு மில்லியன் டாலர் செலவு: ஹாங்காங்கில் கேலிக்குரியதாகும் ஜனநாயகம்!

By சந்தனார்

ஹாங்காங்கின் புதிய தலைமை நிர்வாகியாக ஜான் லீ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பிரிட்டன் வசம் இருந்த ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட 25-வது ஆண்டு கொண்டாட்ட நிகழ்வின்போது (ஜூலை 1) அதிபர் ஜி ஜின்பிங் முன்னிலையில் அவர் பதவியேற்றுக்கொண்டார்.

சீன அரசுக்குத் தீவிரமான விசுவாசியாக அறியப்படும் ஜான் லீ, ஹாங்காங்கின் ஜனநாயகத்தைக் கேலிக்குரியதாக்கும் வகையில் தனது தேர்தல் பிரச்சாரச் செலவு கணக்கை வெளியிட்டிருக்கிறார். இந்தத் தேர்தலில் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என தனக்கு வாக்கு கேட்டு அவர் செலவழித்த தொகை 1.1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 8.7 கோடி ரூபாய்). இதில் குறிப்பிடத்தக்க விஷயம், கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் போட்டியிட்டது அவர் மட்டும்தான் என்பதுதான். தேர்தல் குழுவின் 751 உறுப்பினர்கள் வாக்களித்தாலே வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார் எனும் நிலையில், 1,416 வாக்குகள் ஜான் லீக்குக் கிடைத்தன.

போட்டியாளர் இல்லாமலேயே பிரச்சாரச் செலவு

மொத்தம் 1.4 மில்லியன் டாலர் ஜான் லீக்குத் தேர்தல் நன்கொடையாகக் கிடைத்தது. அதில் 1.1 மில்லியன் டாலரை அவர் செலவு செய்திருக்கிறார். அதில் பெரும்பாலான தொகை விளம்பரங்கள், கூட்டங்கள், அலுவலக வாடகை, போக்குவரத்து ஆகியவற்றுக்காகச் செலவு செய்யப்பட்டிருக்கிறது. செலவழிக்கப்படாத தொகை ஹாங்காங்கின் சமூகக் கருவூலத்துக்குத் தானமாக வழங்கப்பட்டது.

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் ஜான் லீக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. குறிப்பாக, ஜான் லீயின் சீனப் பெயரான லீ கா-சியூ பெயரைக் குறிப்பிட்டு, ‘சகோதரர் சியூ உங்களுக்கு உதவுவார்’ எனும் வாசகத்துடன் அவரது கொள்கைகள், திட்டங்கள் அடிப்படையிலான வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. சீன அரசுக்கு ஆதரவான 59 நிறுவனங்கள் மற்றும் சமூகக் குழுக்களிடமிருந்து ஜான் லீக்கு நன்கொடை வந்ததாக உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

2017-ல் நடந்த தேர்தலில், கேரி லாம் (முந்தைய தலைமை நிர்வாகி) சமூகவலைதளப் பிரச்சாரத்துக்காகச் செலவு செய்ததைவிட, ஆறு மடங்கு அதிகமாகச் செலவழித்திருக்கிறார் ஜான் லீ.

சீர்குலைக்கப்பட்ட ஜனநாயகம்

ஹாங்காங்கின் மக்கள் பிரதிநிதிகள் தேர்வுசெய்யப்படும் விதத்தில் கடந்த ஆண்டு மிகப் பெரும் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதற்கு முன்பு, 70 உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஹாங்காங் சட்டப்பேரவையில் பாதிப் பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுவந்தனர். தேர்தல் சீர்திருத்தத்தின்படி, பேரவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை, 70-லிருந்து 90 ஆக அதிகரிக்கப்பட்டது. எனினும், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 35-லிருந்து 20 ஆகக் குறைக்கப்பட்டது. வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 30 பேர் இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். 40 உறுப்பினர்களை தேர்தல் கமிட்டி நியமிக்கும். அவர்கள் அனைவரும் சீன அரசின் கைப்பாவைகளாகவே இருப்பார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ‘தேசபக்தர்கள்தான் ஹாங்காங்கை ஆள வேண்டும்’ என்று தொடர்ந்து வலியுறுத்திவந்த சீன அரசு இந்தச் சட்டத்தின் மூலம் அதை நிறைவேற்றிவிட்டது.

2021 மார்ச் 11-ல் ஹாங்காங் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான சட்ட மசோதா சீன நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குறித்து விவாதித்த நாடாளுமன்ற நிலைக்குழு இதை அப்படியே ஏற்றுக்கொண்டது. அதாவது, நிலைக்குழுவில் அங்கம் வகிக்கும் 167 பேரும் ஒருமனதாக இதை ஆதரித்தனர். இனி சீன அரசுக்கு எதிரான கொள்கை கொண்டவர்கள் தேர்தல் கமிட்டியிலோ அல்லது சட்டப்பேரவையிலோ இடம்பெற முடியாது எனும் சூழல் உருவானது.

கரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய நெருக்கடியைப் பயன்படுத்தி கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஹாங்காங்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைச் சீன அரசு அமல்படுத்தியது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி ஹாங்காங்கின் ஜனநாயகத்தின் குரல்வளை தொடர்ந்து நசுக்கப்படுகிறது. ஜனநாயக முறையில் இயங்கிவந்த அரசியல் தலைவர்கள் மீது அந்தச் சட்டத்தின்படி குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இப்படியான களேபரங்களுக்கு நடுவில்தான் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான சட்ட மசோதா ஹாங்காங்கில் நிறைவேற்றப்பட்டது.

பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டவர்

ஹாங்காங் மீது தொடர்ந்து அடக்குமுறையைச் சீனா கையாண்டுவருவதாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன. குறிப்பாக ஹாங்காங் விவகாரத்தை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்துவருகிறது. ஹாங்காங்கின் சுயாட்சிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் என்று குற்றம்சாட்டி சீன, ஹாங்காங் அதிகாரிகள் பலர் மீது ட்ரம்ப் அரசு பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது. தற்போது ஜோ பைடன் அரசும் அதைத் தொடர்கிறது. அப்படி பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டவர்களில் ஜான் லீயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE