டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் எஸ்ஜி-11 விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்பைஸ்ஜெட் B737 மூலமாக இயக்கப்படும் SG-11 (டெல்லி-துபாய்) விமானத்தில் இன்டிகேட்டர் லைட் செயலிழந்ததால் உடனடியாக கராச்சியில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் கராச்சியில் பத்திரமாக தரையிறங்கியது என்றும், பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர் எனவும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, விமானத்தில் அவசரநிலை அறிவிக்கப்படவில்லை, சாதாரணமாகவே தரையிறக்கப்பட்டது. பயணிகளுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது அவர்களுக்கு தகவலகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளை துபாய்க்கு அழைத்துச் செல்லும் மாற்று விமானம் கராச்சிக்கு அனுப்பப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமானத்தின் இடது தொட்டியில் இருந்து அசாதாரணமாக எரிபொருள் அளவு குறைவதை பராமரிப்பு குழுவினர் கவனித்தனர். அதன்பிறகு தீவிரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது, இருப்பினும் எரிபொருள் அளவு குறைந்து கொண்டே வந்தது. இதனால் விமானம் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. விமானத்திற்கு பிந்தைய ஆய்வின் போது, இடது பிரதான தொட்டியில் இருந்து எந்தக் காட்சி கசிவும் கண்டறியப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.