உலக அதிசயங்களில் ஒன்றான பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரம் துருப்பிடித்த நிலையில் உள்ளதாக பிரெஞ்சு பத்திரிகையான மரியன்னே தெரிவித்துள்ளது.
19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1889-ம் ஆண்டில் கஸ்டாவ் ஈபிள் என்ற பொறியாளரால் இரும்பினால் உருவாக்கப்பட்ட 324-மீட்டர் (1,063 அடி) உயரமான கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. இந்த கோபுரத்தை பார்வையிட ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு மில்லியன் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்.
தற்போது மரியன்னே பத்திரிகை வெளியிட்டுள்ள நிபுணர்களின் ரகசிய அறிக்கைகளின்படி, ஈபிள் டவர் துருப்பிடித்து மோசமான நிலையில் இருப்பதாகவும், முழுமையான பராமரிப்பு தேவைப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. " இந்த டவரை கட்டியெழுப்பிய கஸ்டாவ் ஈபிள் இந்த இடத்திற்குச் வந்தால் அவருக்கு மாரடைப்பு வரும்" என்று இந்த கோபுர மேலாளர்களில் ஒருவர் தெரிவித்ததாக பத்திரிகை செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகளுக்காக ஈபிள் கோபுரத்துக்கு தற்போது 60 மில்லியன் யூரோக்கள் செலவில் மீண்டும் வர்ணம் பூசப்பட்டு வருகிறது. 20வது முறையாக இந்த கோபுரத்தில் இப்போது வர்ணம் பூசப்படுகிறது.
தற்போதுவரை கோபுரத்தின் சுமார் 30% அகற்றப்பட்டு இரண்டு புதிய கோட்டுகள் வர்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கோவிட் தொற்றுநோய் காரணமாக அவசரகதியில் வேலை நடைபெற்று வருகிறது. ஆனால், கோபுரத்தை பராமரிக்கும் நிறுவனமான Societe d'Exploitation de la Tour Eiffel (SETE) இது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மேலும்,சுற்றுலா வருவாயை இழக்க நேரிடும் என்பதால் பராமரிப்பு பணிகளுக்காக நீண்ட நாட்கள் கோபுரத்தை மூடவும் SETE தயங்குகிறது.