கருக்கலைப்பைத் தடை செய்யும் வகையில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் கருக்கலைப்புக்குப் பல்வேறு மாநிலங்கள் தடைவிதித்திருப்பதால், அந்நாட்டின் பெண்கள் பெரும் சவாலை எதிர்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதன் மூலம் கர்ப்பமடைந்த ஒஹையோ மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடும் துயரத்தை எதிர்கொண்டிருக்கிறார். ஒஹையோ மாநிலத்தில் கருக்கலைப்பு தடை விதிக்கப்பட்டிருப்பதால், அச்சிறுமி கருவைக் கலைக்க இண்டியானா மாநிலத்துக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்.
பின்னணி என்ன?
ரோ எதிர் வேட் வழக்கில் 1973-ல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, கருக்கலைப்பு செய்துகொள்வது அரசமைப்புச் சட்ட உரிமை என உறுதிசெய்தது. இதையடுத்து, அந்நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கருக்கலைப்பு தொடர்பாக அமலில் இருந்த சட்டங்கள் முடிவுக்கு வந்தன. 50 ஆண்டுகளுக்கும் மேல் அமெரிக்கப் பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை பெற்றிருந்த நிலையில், டாப்ஸ் எதிர் ஜாக்ஸன் மகளிர் சுகாதார நிறுவனம் வழக்கில், 1973-ல் அளிக்கப்பட்ட தீர்ப்பைத் திரும்பப் பெற்றது உச்ச நீதிமன்றம்.
ஜூன் 24-ல் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் கருக்கலைப்புக்குத் தடை விதிக்கும் சட்டங்கள் உயிர் பெற்றன. 20-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் கருக்கலைப்பைத் தடை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது மனித உரிமைகளுக்கு எதிரானது என அமெரிக்க மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. பல்வேறு பெண்கள் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துவருகின்றன.
பாலியல் வன்கொடுமையால் கர்ப்பம்
இந்தச் சூழலில்தான் ஒஹையோ மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியி பரிதாப நிலை பேசுபொருளாகியிருக்கிறது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் கர்ப்பமடைந்த அந்தச் சிறுமி தற்போது ஆறு வார கர்ப்பத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்.
ஒஹையோ மாநிலத்தைப் பொறுத்தவரை ஆறு வாரக் கருவைக் கலைக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இண்டியானா மாநிலத்தில் கருக்கலைப்புக்கு இன்னமும் தடை விதிக்கப்படவில்லை. எனினும், இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் பேரவை சிறப்புக் கூட்டத்தொடரில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்தச் சூழலில், கருவைக் கலைக்க ஒஹையோவிலிருந்து இண்டியானா மாநிலத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இதற்கிடையே, கருவில் வளரும் சிசுவைத் தக்கவைப்பதா, பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமடைந்த சிறுமி தனது கர்ப்பத்தைக் கலைத்துக்கொள்ள அனுமதிப்பதா எனும் தார்மிக விவாதங்களும் நடந்துவருகின்றன.