கோபன்ஹேகன் துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் மரணம்: கொலையாளி கைது!

By காமதேனு

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேனில் உள்ள ஃபீல்ட்ஸ் வணிக வளாகத்தில் நேற்று (ஜூலை 3) மதியம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 3 பேர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்டத் தகவல் வெளியான நிலையில், ஏராளமானோர் உயிரிழந்திருப்பதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும் பலர் படுகாயமடைந்திருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் எழுந்திருக்கிறது.

“இந்தத் தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். பலர் காயமடைந்திருக்கிறார்கள்” என செய்தியாளர்களிடம் கூறியிருக்கும் கோபன்ஹேகன் காவல் ஆய்வாளர் சோரென் தாமஸ்ஸன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து துல்லியமான தகவல் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. இந்தத் தாக்குதலின் நோக்கம் குறித்து உடனடியாக எதையும் தெரிவிக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்.

“உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை. இந்தச் சம்பவம் மிகவும் தீவிரமானது” என கோபன்ஹேகன் மேயர் சோஃபி ஆண்டர்ஸன் தெரிவித்திருக்கிறார்.

22 வயது இளைஞர் கைது

டென்மார்க்கைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். கொலையாளி அந்நாட்டைச் சேர்ந்த வெள்ளையின இளைஞர் என்றே கருதப்படுகிறது. இந்தத் தாக்குதலில் வேறு யாருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை எனக் கூறியிருக்கும் போலீஸார், தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

சந்தேகத்துக்குரிய நபரின் படத்தை டென்மார்க்கைச் சேர்ந்த டிவி2 செய்தி நிறுவனம் வெளியிட்டிருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

கோபன்ஹேகன் புறநகர்ப் பகுதியில் உள்ள ’ஃபீல்ட்ஸ்’ வட ஐரோப்பாவின் ஸ்காண்டினேவியா பகுதியில் உள்ள மிகப் பெரிய வணிக வளாகம் ஆகும். அண்டை நாடான நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் ஜூன் 25-ல், மூன்றாம் பாலினத்தவர்கள் நடத்திய எல்ஜிபிடிக்யூ பேரணியில், ஈரானைச் சேர்ந்த ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்தச் சம்பவம் நடந்து அடுத்த வாரத்தில் கோபன்ஹேனில் துப்பாக்கிச்சூடு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE