2 நாட்களில் பொருளாதாரம் சீர்குலைந்து விடும்: கோத்தபய ராஜபக்சவை எச்சரிக்கும் மத்திய வங்கி

By காமதேனு

இலங்கையில் 2 நாட்களில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும் என மத்திய வங்கியின் கவர்னர் நந்தலால் வீரசிங்கே எச்சரித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் போராட்டம் வெடித்துள்ளது. இதையொட்டி இலங்கையில் கலவரத்தில் ஈடுபடுவோரையும், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவோரையும் சுட்டுத்தள்ள உத்தரவிட்டு முப்படைகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடு முழுவதும் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இலங்கை ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது. இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியேற காவல்துறை உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில், இலங்கையின் மத்திய வங்கியின் கவர்னர் நந்தலால் வீரசிங்கே இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “இலங்கையில் இரண்டு நாட்களில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்து விடும். அடுத்த இரண்டு வாரங்களில் அரசியல் கட்சிகள் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தாவிட்டால் நான் மத்திய வங்கியின் கவர்னர் பதவிவியிலிருந்து விலகுவேன். தற்போதைய நெருக்கடிக்கு அரசியல் தீர்வு இல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக வங்கி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் வெற்றியடையாது ” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE