அதிவேகமாக அழிக்கப்படும் அமேசான் காடுகள்: பிரேசிலில் உச்சமடையும் பிரச்சினை!

By சந்தனார்

தென்னமெரிக்காவில் உள்ள அமேசான் காடுகள், உலகின் 60 சதவீத மழைக்காடுகளைக் கொண்டவை. கொலம்பியா, பெரு, பொலிவியா போன்ற நாடுகளிலும் பரவியிருந்தாலும் பிரேசிலில்தான் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட அமேசான் காடுகள் அமைந்திருக்கின்றன. அந்த பிரேசிலில்தான் அமேசான் காடுகள் அதிக அளவில் அழிக்கப்படுகின்றன என்பதுதான் துயரம்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அழிக்கப்பட்டதைவிடவும் மிக அதிகமான காடுகள், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அழிக்கப்பட்டிருப்பதாக பிரேசில் அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களே தெரிவித்திருக்கின்றன.

ஏப்ரல் மாதத்தின் முதல் 29 நாட்களில் 1,012.5 சதுர கிலோமீட்டர் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதாக பிரேசில் அரசு நிறுவனமான ஐஎன்பிஇ (விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம்) தெரிவித்திருக்கிறது. 2015/16 முதல் இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டுவரும் ஐஎன்பிஇ, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் முடிவில் இதுகுறித்த அறிக்கையையும் வெளியிடுகிறது.

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மொத்தம் 1,954 சதுர கிலோமீட்டர் வனப் பரப்பு அழிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் இதே மாதங்களில் அழிக்கப்பட்டதவிடவும் இது அதிகம். கிட்டத்தட்ட நியூயார்க் நகரத்தின் பரப்பளவைப் போல இரு மடங்கு பரப்பளவு கொண்ட காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன.

அமேசான் காடுகள் பிரேசிலுக்கு மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் முக்கியமானவை. பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளைப் பெருமளவு தடுக்கூடியவை. காரணம், பருவநிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணியாக இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடைப் பெருமளவில் இக்காடுகள் உறிஞ்சிகொள்கின்றன.

தீவிர வலதுசாரித் தலைவரான ஜேர் போல்ஸனாரோ 2019-ல் பிரேசிலின் அதிபராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அமேசான் காடுகள் முன்னெப்போதையும் விட மிக அதிகமாக அழிக்கப்படுகின்றன. காரணம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அம்சங்களையும் அவர் முற்றிலும் சிதைத்துவிட்டார். பருவநிலை மாற்றம் எனும் கருத்தாக்கத்தையே ஏற்றுக்கொள்ளாத அவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் பெயரில் வனங்களைப் பாதுகாப்பதுதான் பிரேசிலின் தொழில் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருக்கிறது எனப் பேசியவர். வனப் பகுதிகளில் தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதில் இருக்கும் கட்டுப்பாடுகளை அவரது அரசு பெருமளவு நீக்கிவிட்டது.

பிரேசிலில் அதிபர் தேர்தல் நடக்கும் ஆண்டுகளில் காடுகள் அதிக அளவில் அழிக்கப்படுவது வழக்கம் என்கிறார்கள் அமேசான் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வாளர்கள். அதற்குக் காரணம், காடுகளை அழித்து தொழில் தொடங்க அதிக அளவு அனுமதி வழங்குவதை அரசியல் தலைவர்கள் பின்பற்றுவதுதான். மக்களை ஏமாற்றி வாக்கு சேகரிக்க ஒரு தந்திரமாகவே பயன்படுத்துவதுதான். சுற்றுச்சூழல் பிரச்சினைகளைவிடவும் தொழில் துறை வளர்ச்சியே முக்கியம் எனக் கருதுபவர்களால் இந்த அவலம் நேர்கிறது.

வரும் அக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இந்த ஆண்டு அதிக அளவில் அமேசான் காடுகள் அழிக்கப்படுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்னர் அமேசான் காடுகள் பற்றியெரிந்தபோது, “இயற்கையை அழிக்கும் வேலையை நாம் நிறுத்த வேண்டியதன் தெளிவான சமிக்ஞை இது” என்று எச்சரித்தார் சூழலியல் போராளி கிரேட்டா தன்பெர்க். கடந்த சில மாதங்களிலோ அதிவேகமாக அமேசான் காடுகளை அழித்துக்கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE