‘உக்ரைன் போருக்கு ஸெலன்ஸ்கி, பைடன் போன்றோரும் பொறுப்பு’ - பிரேசில் முன்னாள் அதிபர் அதிரடி!

By காமதேனு

உக்ரைன் போரில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கின்றன. அந்நாடுகள் நேரடியாகப் போரில் இறங்கவில்லை என்றாலும் உக்ரைனுக்கு ஆயுதங்களையும் நிதியுதவியையும் வழங்குகின்றன. கூடவே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்திருக்கின்றன.

இந்நிலையில், இந்தப் போருக்கு ரஷ்ய அதிபர் புதினைப் போலவே உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கியும் ஒரு காரணம் என பிரேசில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வா தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக, ‘டைம்’ இதழுக்குப் பேட்டியளித்திருக்கும் லூலா, இந்தப் போரில், ஸெலன்ஸ்கி ஆற்றிவரும் உரைகளை மேற்கத்தியத் தலைவர்கள் பாராட்டுவது பொறுப்பற்ற செயல் என விமர்சித்திருக்கிறார். போரை நிறுத்த முயற்சிக்காமல், போரை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் நடந்துகொள்வதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

“தொலைக்காட்சியில் உரையாற்றும் உக்ரைன் அதிபருக்குப் பாராட்டுகள் கிடைக்கின்றன. ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரது உரைக்கு எழுந்து நின்று கைதட்டுகின்றனர். ஆனால், இந்தப் போருக்கு ரஷ்ய அதிபர் புதினைப் போலவே இந்த நபரும் (ஸெலன்ஸ்கி) ஒரு காரணம்” என்று அவர் கூறியிருக்கிறார்.

நகைச்சுவை நடிகராக இருந்து உக்ரைன் அதிபரான ஸெலன்ஸ்கி பற்றிப் பேசுகையில், “நீங்கள் ஒரு நல்ல நகைச்சுவை நடிகராக இருக்கலாம். ஆனால், நீங்கள் தொலைக்காட்சியில் உங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள போர் நடத்தப்பட வேண்டும் என அவசியமில்லை” என்றும் லூலா தெரிவித்திருக்கிறார்.

இவ்விஷயத்தில் அமெரிக்காவின் செயல்பாடுகளையும் அவர் விமர்சித்திருக்கிறார். “உக்ரைனை புதினின் படைகள் ஊடுருவியிருக்கக் கூடாது. ஆனால், இதில் புதின் மட்டும் குற்றவாளி அல்ல. அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும்கூட குற்றவாளிகள்தான். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தப் போரைத் தவிர்த்திருக்க முடியும். விமானத்தில் ஏறி மாஸ்கோவுக்குச் சென்று புதினிடம் பேசியிருக்கலாம். போரைத் தூண்டிவிட்டிருக்கக் கூடாது” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

76 வயதாகும் லூலா, தொழிலாளர் கட்சியின் தலைவர். அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் போல்ஸனாரோவுக்குக் கடும் போட்டியாளராக அவர் கருதப்படுகிறார். இந்த முறை அவர் வெல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் எனக் கருதப்படுகிறது.

இரண்டு முறை பிரேசில் அதிபராகப் பதவி வகித்திருக்கும் லூலா, தனது ஆட்சிக்காலத்தில், வெவ்வேறு சித்தாந்தங்கள் கொண்ட அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ், ஈரான் அதிபர் மஹ்மூத் அகமதிநிஜாத் போன்ற உலகத் தலைவர்களுடன் நல்லுறவைப் பேணியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE