இந்திய மாணவர்களுக்கு அனுமதி: இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இறங்கிவந்த சீனா!

By காமதேனு

சீனாவில் பயின்றுவந்த இந்திய மாணவர்கள் அந்நாட்டுக்குத் திரும்பிச் சென்று கல்வியைத் தொடர கடந்த இரண்டு ஆண்டுகளாக அனுமதி வழங்காமல் இருந்த அந்நாட்டு அரசு இன்று ஒருவழியாக அனுமதி வழங்கியிருக்கிறது. குறிப்பாக, ‘சில மாணவர்க’ளுக்கு அனுமதி வழங்குவதாக சீனா தெரிவித்திருக்கிறது.

23,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சீனாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயின்றுவருகின்றனர். அந்நாட்டில் 2019 டிசம்பரில் கரோனா பரவல் தொடங்கியதும் இந்தியா திரும்பிய அவர்கள், அங்கு அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் காரணமாகவும், இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட பயணத் தடை உள்ளிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாலும் சீனாவுக்குச் செல்ல முடியவில்லை. இந்தியாவிலிருந்து வரும் எல்லா விமானங்களையும் ரத்து செய்ததுடன், இந்தியர்களுக்கு விசா வழங்கவும் சீனா அனுமதி மறுத்தது. இந்திய மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், அவர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ளாமல் இரண்டு ஆண்டுகளாக மவுனம் காத்தது சீனா.

பெருந்தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்ததும் தளர்வுகளை அமல்படுத்திய சீனா, கடந்த சில மாதங்களில் பாகிஸ்தான், தாய்லாந்து, சாலமன் தீவுகள், இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியது. எனினும் இந்திய மாணவர்கள் குறித்து எதுவும் சொல்லாமல் தவிர்த்தே வந்தது. சீனாவில் பணிபுரியும் இந்தியர்களும் பணிக்குத் திரும்ப முடியாத சூழல் நிலவியது.

இந்தச் சூழலில், தலைநகர் பெய்ஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியான், படிப்பைத் தொடர்வதற்காக சீனாவுக்குத் திரும்ப விரும்பும் இந்திய மாணவர்களின் நிலை குறித்து சீன அரசு அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். “இந்திய மாணவர்கள் சீனாவுக்குத் திரும்புவதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. சீனாவுக்குத் திரும்ப விரும்பும் இந்திய மாணவர்களின் பட்டியலை இந்தியத் தரப்பு வழங்கினால் போதும். ஏராளமான இந்திய மாணவர்கள் சீனாவில் பயின்றுவருகிறார்கள் என எங்களுக்குத் தெரியும். எனவே, அவர்களது பெயர்களைச் சேகரிப்பதில் இந்தியாவுக்கு அவகாசம் தேவை என்பதையும் உணர்ந்திருக்கிறோம்” ” என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, 2022 மார்ச் 25-ல் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி இடையே நிகழ்ந்த சந்திப்பின்போது, இந்திய மாணவர்களை மீண்டும் அழைத்துக்கொள்வது பற்றி பரிசீலிக்க சீனா ஒப்புகொண்டதாக சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்திருக்கிறது.

சீனா செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் மே 8-ம் தேதிக்குள் கூகுள் ஃபார்ம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் இந்தியத் தூதரகம் தெரிவித்திருக்கிறது. மாணவர்கள் இந்த இணைப்பில் விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் எல்லா மாணவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுமா என உறுதியாகச் சொல்லப்படவில்லை. மாணவர்களின் பட்டியலை இந்தியத் தூதரகம் வழங்கிய பின்னர் அது குறித்து சீனா முடிவெடுக்கும் என்றே தெரிகிறது. கூடவே, சீனா விதிக்கும் கரோனா தடுப்பு நடைமுறைகளை நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான கட்டணச் செலவுகளை மாணவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சீனா தெரிவித்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE