ட்விட்டரின் விலை 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி: எலான் மஸ்க் கைக்கு செல்கிறது

By காமதேனு

சமூக வலைதளமான ட்விட்டரை, உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்க் 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குவது இறுதியாகி உள்ளது.

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை வாங்குவதற்கு உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் முயன்று வந்தார். அதன்படி, ட்விட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கு அவர் முன்வந்தார். ஒரு பங்கை 54.20 டாலருக்கு வாங்கத் தயார் என்றும் கூறியிருந்தார் எலான் மாஸ்க்.

இது தொடர்பாக ட்விட்டர் நிர்வாகக் குழுவினர் மற்றும் எலான் மஸ்க் தரப்பினர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். `ட்விட்டர் தன்னுடைய ஒப்பந்தத்துக்கு சம்மதம் தெரிவிக்காத பட்சத்தில் பங்குதாரர் நிலையை மாற்ற யோசிக்க வேண்டியிருக்கும்’ என எலான் மஸ்க் கூறினார். அதைத்தொடர்ந்தே நேற்று இரவு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

மொத்தமாக ரூ.3.30 லட்சம் கோடிக்கு எலான் மஸ்க்கிற்கு பங்குகள் விற்பனைக்கு போவதாகவும், ஒவ்வொரு பங்குக்கும் ரூ.4,154 கொடுக்க எலான் மஸ்க் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

`தான் பணம் சம்பாதிப்பதற்காக ட்விட்டரை வாங்கவில்லை’ என்றும் `பயனர்கள் சுதந்திரமாக கருத்துத் தெரிவிப்பதற்கு நம்பிக்கையான ஒரு சமூக வலைத்தளத்தை கட்டமைக்கும் நோக்கில் ட்விட்டரை வாங்க விரும்புவதாகவும்’ என்றும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE