சாவை நெருங்குகிறதா சாக்கடல்?

By ஆர்.என்.சர்மா

உலக புவி தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. புவி வெப்பமடைவது, மழைக் குறைவு, நிலத்தடி நீர்மட்டம் வற்றுவது, காலம் அல்லாத காலத்தில் பருவமழை அதிக அளவில் பெய்வது, வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை என்று பல்வேறு பிரச்சினைகள் உலகின் பல பகுதிகளிலும் தலைதூக்கி வருகின்றன. இவற்றைப் பற்றிப் பேசாத அரசுகள் இல்லை, சிந்திக்காத சமூகங்களும் இல்லை. ஆனால் செயல்படுவதுதான் இல்லை. இந்த வரிசையில் இன்னொரு பிரச்சினைதான் சாக் கடல் (Dead Sea) வற்றுவது. இது பருவநிலை மாற்றத்தால்தான் என்பவர்கள் ஒரு சாரார். அரசுகளின் தண்ணீர் வளக்கொள்கையால்தான் என்போர் இன்னொரு சாரார். இருவருமே பிரச்சினையை சரியாகத்தான் அடையாளம் கண்டிருக்கிறார்கள். இரண்டுமே இதற்குக் காரணம்தான்.

ஜோர்டான் நாட்டு மக்கள்தொகை ஆண்டுதோறும் பெருகிவருகிறது. இதற்கு முக்கியக் காரணம், அகதிகளாக பிற நாடுகளிலிருந்து வந்து குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது. இதனால் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கும் விவசாயத்துக்குமான தண்ணீர் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆண்டுக்கு சுமார் மூன்று அடி அல்லது அதற்கும் மேல் சிறிதளவு என்று சாக்கடல் வற்றிக்கொண்டிருக்கிறது. சாக்கடலில் அதிக உயிரினங்கள் கிடையாது. அதன் உப்புத்தன்மை (அடர்த்தி) அதிகம் என்பதால் அதில் உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு. இதனாலேயே அதற்கு சாக்கடல் என்ற பெயரும் வந்தது.

ஜோர்டான் நாட்டின் தென் பகுதியில் சாக்கடல் வற்றும் பகுதிகளில் நிலத்தில் திடீரென மிகப்பெரிய பள்ளங்கள் செங்குத்தாக ஏற்படுகின்றன. மணல் கிணறைப் போல பல அடி ஆழமுள்ள இந்தப் பள்ளங்களைப் பார்க்கும்போதே அச்சத்தை ஏற்படுத்துவதல்லாமல் விவசாயத்துக்கான நிலப்பரப்பையும் வேகமாகக் குறைத்துவருகின்றன. பள்ளம் விழுந்த இடத்தை விட்டுவிட்டு பக்கத்தில் உள்ள இடத்தில் விதைப்பதோ அறுப்பதோ நினைத்தும் பார்க்க முடியாத ஒன்று. காரணம் பள்ளம் விழுந்த இடமானது அதையொட்டிய பகுதிகளிலிருந்து ஏராளமான மணலை அல்லது மண்ணை அரித்து எடுத்துச் செல்கிறது. எனவே வெற்றிடப் பள்ளத்துக்கு அருகில் செல்வது உயிருக்கு ஆபத்தானது. அருகே மனிதர்கள் மட்டுமல்ல, வாகனங்களையோ உழவுக் கருவிகளையோ கொண்டு செல்வது மேலும் ஆபத்தானது.

இந்தப் பள்ளங்கள் உருவாவதற்கு முன்னால் பூமியில் ரேகை போல வெடிப்புகளோ, ஓசையோ ஏற்படுவதில்லை. எனவே அறிகுறிகள் ஏதுமின்றி திடீரென பள்ளம் தோன்றுவதால் எந்த இடத்தில் பள்ளம் ஏற்படும் என்பதைக்கூட கணிக்க முடியாமல் இருக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அரசின் எந்தத் துறையும் இதைப் பெரிய பிரச்சினையாகக் கருதவில்லை என்றே விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். விவசாயிகள் யாரிடம் புகார் செய்தாலும் பதில், வெறும் மவுனமாகத்தான் இருக்கிறதாம். காரணம் அவர்களாலும் இது ஏன், இதை எப்படித் தடுப்பது என்று கூற முடியாததுதான். சுற்றுச்சூழல் துறையிடம் விவசாயிகள் புகார் செய்தனர். அவர்கள் அதைப்பதிவு செய்துகொண்டதோடு சரி.

உலகிலேயே தண்ணீர் பற்றாக்குறையால் அதிகம் அவதிப்படும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது ஜோர்டான். மக்கள்தொகைப் பெருக்கம், விவசாயம் – தொழில் துறை ஆகியவற்றுக்கான தண்ணீர்த் தேவை அதிகரிப்பு, மழைக் குறைவு, பருவநிலை மாறுதல் ஆகியவற்றால் ஜோர்டான் கடுமையான தண்ணீர் பற்றாக்குறைக்கு ஆளாகியிருக்கிறது.

சாக்கடல் என்பது உப்புச்சுவை அதிகம் கொண்ட தண்ணீர் ஏரியாகும். இது எல்லா பக்கமும் நிலங்களால் சூழப்பட்டது. ஜோர்டான், இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள், இஸ்ரேல் ஆகியவை இந்தக் கடலைச் சூழ்ந்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 20 மீட்டர்கள் அதாவது 66 அடிக்கும் அதிகமாகவே சாக்கடல் வற்றிவிட்டது. கடலில் இருந்த நீரின் அளவு குறைந்தது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டமும் வேகமாகக் குறைந்துவிட்டது. இதனால்தான் கடலோரங்களில் நிலப்பரப்பில் இப்படி ஏராளமான பெரும் பள்ளங்கள் திடீர் திடீரென ஏற்படுகின்றன.

பேராசிரியர் நிஜார் அபு ஜபேர்

பருவநிலை மாறுதலால் சாக்கடலில் தண்ணீர் அளவு குறையவில்லை என்கிறார் ஜெர்மன்-ஜோர்டான் பல்கலைக்கழகத்தின் புவி வேதியியல் பேராசிரியர் நிஜார் அபு ஜபேர். ஜோர்டான் நதியில் வரும் நீரை இஸ்ரேல் மிகப் பெரிய அணைக்குத் திருப்பி தேக்கி வைப்பதால்தான் சாக்கடல் வற்றுகிறது என்கிறார். தெற்கு லெபனான், சிரியா வழியாகப் பாயும் ஜோர்டான் நதி கடைசியாக சாக்கடலில்தான் கலக்கிறது. சாக்கடல் பகுதியை நெருங்கும்போது அது அங்குள்ள நிலத்தில் ஊறி, கடலை அடைகிறது. அதனால் மண்ணில் கலந்திருக்கும் உப்பு கடலில் சேர்கிறது. அதனால் கடல் உப்பு கரிப்பது அதிகமாக இருக்கிறது. இப்படி தண்ணீர் நிலத்தில் குறிப்பாக மணலில் கலப்பதால் மணல் நெகிழ்ந்துவிடுகிறது, இதனால் அதில் பெரிய பள்ளம் ஏற்படுகிறது.

ஆண்டுக்கு 2,000 லட்சம் கன அடி தண்ணீர் சாக்கடலில் வந்து சேரும். இப்போது அணைக்கு திருப்பிவிடப்படும் பெரும்பகுதி நீருக்குப் பிறகு பாதியளவு அதாவது 1,000 லட்சம் கன அடி அளவுக்குத்தான் சேருகிறது. ஜோர்டான் நதியின் நீரை அணைக்குத் திருப்பும் வேலையை அந்தப் பகுதியை ஆக்கிரமித்த இஸ்ரேல் 1960-களின் தொடக்கத்தில் மேற்கொண்டது. அதைப் பார்த்து ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளும் அதேபோல நதியின் நீரைத் தங்களுடைய தேவைகளுக்காக அணைகளுக்குத் திருப்பிவிட்டன. இதனால்தான் சாக்கடலுக்கு வரும் நீரின் அளவு பெருமளவு குறைந்துவிட்டது என்கிறார் அபு ஜபேர்.

கவ்லூத் பஷ்டாவி

சாக்கடலில் நீரின் அளவு குறைய, ஜோர்டான் நதியின் தண்ணீரை அணைக்குத் திருப்பிவிடுவது மட்டும் காரணமல்ல என்கிறார் ஜோர்டான் பள்ளத்தாக்கு ஆணையத்தைச் சேர்ந்த பொறியாளர் கவ்லூத் பஷ்டாவி. ஆண்டுதோறும் பெய்யும் மழையின் அளவு குறைந்ததாலும், சாக்கடலுக்குச் செல்லும் காட்டாறுகளில் நீர்ப்பெருக்கு அதிகரித்துவருவதாலும், ஜோர்டான் நதியிலேயே நீர்ப்பெருக்கு ஏற்பட்டு வேகமாக அது வழிந்தோடுவதாலும், வெயிலின் அளவு தொடர்ந்து அதிகரிப்பதால் நீரில் பெரும்பகுதி ஆற்றில் வரும்போதே ஆவியாவதாலும் சாக்கடலில் நீரின் அளவு குறைகிறது என்கிறார் பஷ்டாவி.

ஜோர்டான்

மேற்காசியாவில் உள்ள நாடு ஜோர்டான். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சந்திக்கும் இடம் என்றும் சொல்லலாம். ஜோர்டான் நதியின் கிழக்குக் கரையில் ஜோர்டான் நாடு அமைந்திருக்கிறது. தெற்கிலும் கிழக்கிலும் சவுதி அரேபியா, வடகிழக்கில் இராக், வடக்கில் சிரியா, மேற்கில் இஸ்ரேல், பாலஸ்தீனர்களின் மேற்குக் கரை, சாக்கடல் ஆகியவை சூழ்ந்துள்ளன. செங்கடலில் அகூபா வளைகுடாவில் ஜோர்டானின் கடற்கரையோர நீளம் 26 கிலோ மீட்டர். அந்த வளைகுடா தான் ஜோர்டானையும் எகிப்தையும் பிரிக்கிறது. தலைநகரம் அம்மான். ஆட்சி மொழி அரபு. மக்கள்தொகையில் 95% அராபியர்கள். இஸ்லாமியர்கள் 97%. பரப்பளவு 89,342 சதுர கிலோமீட்டர். மக்கள்தொகை 1,10,42,719. ஜிடிபி 10,215.8 கோடி டாலர்கள். நபர்வாரி வருவாய் 10,007 டாலர்கள். செலாவணி – ஜோர்டான் தினார்.

2015 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 21 லட்சம் பாலஸ்தீனர்களும் 14 லட்சம் சிரியர்களும் ஜோர்டானில் அகதிகளாகக் குடியேறியுள்ளனர். இராக்கின் இஸ்லாமிய அரசால் துன்புறுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஜோர்டானில்தான் தஞ்சம் புகுந்துள்ளனர். அகதிகளுக்குப் புகலிடம் தருவதில் ஜோர்டான் தாராள மனதுடன் நடந்துகொண்டாலும் சமீப காலமாக சிரியாவிலிருந்து ஏராளமான அகதிகள் குடியேறியதால் அரசுக்கு பெருத்த சுமை ஏற்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டில் 102-வது இடத்தில் இருக்கும் ஜோர்டான், உயர் நடுத்தர வகுப்பினர் அதிகம் உள்ள நாடு. அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில் முக்கிய இடம் வகிக்கிறது. தொழில்திறன் மிக்க மக்களைக் கொண்டது. சமீபகாலமாக மருத்துவச் சுற்றுலா வருவோர் எண்ணிக்கையும் அதிகம். அதன் சுகாதாரத் துறை நல்ல வளர்ச்சி கண்டிருக்கிறது. இயற்கை வளங்கள் பற்றாக்குறை, அகதிகள் வருகை அதிகரிப்பு, மேற்காசியாவின் புவியரசியல் ஆகிய காரணங்களால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE