‘இது அதிகாரபூர்வமற்றது’ - இல்ஹான் ஓமரின் பாக்., பயணம் பற்றி அமெரிக்கா அதிரடி கருத்து!

By காமதேனு

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் இல்ஹான் ஓமரின் பாகிஸ்தான் பயணம் கடும் சர்ச்சைகளுக்கு வித்திட்டிருக்கிறது. சமீபத்தில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பிரதமர் பதவியை இழந்த இம்ரான் கானைச் சந்தித்ததுடன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும் இல்ஹான் பயணம் செய்தது இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

சோமாலியாவைப் பூர்விகமாகக் கொண்டவரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான இல்ஹான் ஓமர் நான்கு நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றிருக்கிறார். ஏப்ரல் 20-ல் பாகிஸ்தான் சென்டைந்த அவர், முதலில் இஸ்லாமாபாதின் பானி கலா பகுதியில் உள்ள இம்ரான் கானின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார்.

பின்னர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குப் பயணம் மேற்கொண்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (பாகிஸ்தானியர்கள் அதை ‘ஆசாத் காஷ்மீர்’ (சுதந்திர காஷ்மீர்) என அழைக்கின்றனர்) தலைநகரான முஸ்ஃபராபாத்தில், அதிபர் சுல்தான் மெஹ்மூத் சவுத்ரியைச் சந்தித்துப் பேசினார். காஷ்மீர் குறித்து அமெரிக்கா மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். அமெரிக்காவின் ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.பி ஒருவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் சென்றதையும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாகப் பேசியதையும் இந்தியா கண்டித்திருக்கிறது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கனின் ஆலோசகரான டெரெக் சோலெட், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, “இது ஒரு அதிகாரபூர்வமற்ற பயணம். இதை வைத்து அமெரிக்க அரசின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூற முடியாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “ஓர் அரசியல்வாதி, தனது குறுகிய சிந்தனை கொண்ட அரசியலைத் தனது நாட்டில் மேற்கொள்கிறார் என்றால், அது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால், நமது பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் மீறும் வகையில் செயல்படுகிறார் என்றால், அவரது வருகை கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தானில் புதிய அரசு அமைந்த பின்னர் அங்கு சென்றிருக்கும் முதல் அமெரிக்க எம்.பி இல்ஹான் ஓமர்தான். தனது அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்தது அமெரிக்கா தான் என இம்ரான் கான் குற்றம்சாட்டிவரும் நிலையில், இல்ஹான் ஓமரின் பாகிஸ்தான் பயணம் அமெரிக்க அரசை அதிருப்தியுறச் செய்திருக்கிறது.

இல்ஹான் ஓமர், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், அதை அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு கண்டிக்கவில்லை என்றும் விமர்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE