மீண்டும் மகுடம் சூடுவாரா மெக்ரான்?

By வெ.சந்திரமோகன்

2017-ல் பிரான்ஸ் அதிபராக இம்மானுவேல் மெக்ரான் பதவியேற்றபோது, பிரான்ஸுக்கு வெளியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. பிரான்ஸில் 1958-ல் ஐந்தாவது குடியரசு நிறுவப்பட்டபோது உருவான அரசியல் எழுச்சிக்குப் பிறகு, அந்நாட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய அரசியல் மாற்றம் என அந்தத் தேர்தல் வர்ணிக்கப்பட்டது.

அந்தத் தேர்தலுக்கு 14 மாதங்களுக்கு முன்னர் மெக்ரான் தொடங்கிய ‘லா ரிபப்ளிக் என் மார்ஷே’ (எல்ஆர்இஎம்) கட்சி, தேர்தலில் பெரும் வெற்றிபெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. ஊழலுக்கு எதிரான கட்சி, சிறந்த நிர்வாகத்தை அளிக்கக்கூடிய கட்சி என்றெல்லாம் மெக்ரானின் கட்சி மீது எழுப்பப்பட்ட பிம்பங்கள் அவரது வெற்றியை எளிதாக்கின. ஆனால், தற்போது நடந்துகொண்டிருக்கும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது அவருக்கு அத்தனை எளிதானதாக தெரியவில்லை!

2022 பிரான்ஸ் அதிபர் தேர்தலின் ஏப்ரல் 10-ல் முதல் சுற்றுத் தேர்தல் நடந்தது. மொத்தம் 12 வேட்பாளர்கள் களம் கண்ட இந்தச் சுற்றில் மெக்ரான் முதல் இடத்திலும், ‘நேஷனல் ரால்லி’ (National Rally) கட்சியின் மரீன் லெ பென் இரண்டாவது இடத்திலும் வந்திருக்கிறார்கள். மெக்ரானுக்கு 27.84 சதவீத வாக்குகளும், மரீனுக்கு 23.15 சதவீத வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. ஏப்ரல் 24-ல் இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது.

2017 தேர்தலிலும் இருவருக்கும் இடையில்தான் பிரதானப் போட்டி நிலவியது. இந்த முறை அந்தப் போட்டி மிகவும் இறுக்கமானதாக மாறியிருக்கிறது.

நம்பிக்கை தந்த இளம் தலைவர்

முதலீட்டு வங்கியாளராக வாழ்க்கையைத் தொடங்கி அரசியலுக்கு வந்தவர் மெக்ரான். பிரான்சுவா ஹொல்லாந்தே அதிபராக இருந்தபோது அவருக்கு ஆலோசகராக இருந்தவர். நிதித் துறை, தொழில் துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சராகவும் பதவிவகித்தவர். சோஷலிஸக் கட்சியில் இருந்தவர் 2016 ஏப்ரலில் ‘லா ரிபப்ளிக் என் மார்ஷே’ கட்சியைத் தொடங்கினார். 2017 தேர்தலில் போட்டியிட்ட அவரது கட்சி மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. மையவாதம், தாராளமயக் கொள்கை ஆகியவற்றைப் பின்பற்றும் அக்கட்சியின் வேட்பாளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் என்பது அவரது முற்போக்கு அரசியல் பார்வையைப் பறைசாற்றியது. அதிபரானதும் அவர் மீது மேலும் கவனம் குவிந்தது.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதைக் கண்டித்தது, சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டதைக் கண்டித்தது என மெக்ரான் தொடர்பான தகவல்கள் உலக அளவில் நம்பிக்கையூட்டும் இளம் தலைவர் எனும் பிம்பத்தை உருவாக்கின. 2018-ல் அமெரிக்க நாடாளுமன்றத்தில், “வளம் மிக்க எதிர்காலத்துக்கான நம்பிக்கைகள் நிறைந்த ஒரு உலகை, தீவிர தேசியவாதம் சூறையாடுவதை நாம் அனுமதிக்கக் கூடாது” என மெக்ரான் ஆற்றிய உரை உலகின் கவனத்தை ஈர்த்தது. என்னதான் வெளிநாடுகளில் நற்பெயர் வாங்கினாலும் உள்ளூரில் செல்வாக்கைத் தக்கவைப்பதுதானே, அடுத்தடுத்த வெற்றிகளுக்கு உதவும். ஆனால், அதைச் செய்ய தவறிவிட்டார் மெக்ரான்!

உலுக்கியெடுத்த ஓய்வூதியத் திட்டம்

மெக்ரானின் ஆட்சியில் பல்வேறு பிரச்சினைகள் அவரது அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களைத் தூண்டின. 2018-ல் சுற்றுச்சூழலைக் காக்க டீசலுக்கு 20 சதவீத வரி விதித்தது பெரும் போராட்டத்துக்கு வித்திட்டது. வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற வழக்கமான பிரச்சினைகளும் அவரது அரசுக்குச் சவாலாக இருந்தன. எனினும், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது தொடர்பாக மெக்ரான் கொண்டுவர விரும்பிய திட்டம்தான் அவருக்கு மிகப் பெரிய சவாலாக உருவெடுத்திருக்கிறது.

2017 தேர்தலின்போதே ஓய்வூதியத் திட்டத்தை அவர் முக்கிய வாக்குறுதியாக முன்வைத்திருந்தார். அந்நாட்டில் 42 வகையான ஓய்வூதியத் திட்டங்கள் அமலில் இருக்கும் நிலையில், நாடு முழுமைக்குமான ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவர 2019-ல் மெக்ரான் திட்டமிட்டார். ஊழியரின் பங்களிப்பின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு அது ஓய்வூதியத்தில் சேர்க்கப்படும் எனும் ஒரு அம்சத்தையும் அதில் சேர்த்தார். மிகவும் கஷ்டப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு ஓய்வூதியத்தை அதிகரிக்கவும் திட்டமிட்டார். ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 65 ஆக உயர்த்துவது அந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம்.

அரசுக்கு எதிரான போராட்டம்

ஆனால், ஏற்கெனவே பணியில் இருப்பவர்களின் ஓய்வுபெறும் வயதை நீட்டித்தால், படித்து வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலம் என்னவாகும் எனும் கேள்வியை பிரெஞ்சு மக்கள் எழுப்பினர். முழுமையான ஓய்வூதியம் பெற 64 வயதுவரை உழைத்தாக வேண்டும்; விருப்ப ஓய்வு பெற முடியாது என்றெல்லாம் அந்தத் திட்டத்தில் இருந்த நிபந்தனைகள் மக்களுக்குக் கோபமூட்டின. போராட்டம் வெடித்தது. 2019 டிசம்பர் 5-ல் தொடங்கிய போராட்டம், பல நாட்களுக்கு நீடித்தது. போராட்டம் தொடர்பாக மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்புகள், அரசுக்கு எதிரான மக்களின் மனநிலையை ஆணித்தரமாக உணர்த்தின.

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் இந்தத் திட்டத்தை அமல்படுத்த முயல்வதால், மெக்ரான் அரசு சர்வாதிகாரப் போக்கைக் கையாள்வதாக விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், மக்கள் தெருவில் இறங்கி நடத்திய போராட்டங்களால், அரசு பின்வாங்கியது. 2020-ல் கரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதும் ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்திவைத்தார் மெக்ரான்.

இந்தத் தேர்தலில் இந்த விவகாரம் தனக்குப் பெரும் தலைவலியாக இருக்கும் என்பதை மெக்ரான் நன்றாகவே உணர்ந்திருக்கிறார். முதல் சுற்றில் பிற வேட்பாளர்களுக்கு வாக்களித்தவர்கள், இரண்டாவது சுற்றில் தனக்கு வாக்களிக்க வேண்டும் என மெக்ரான் விரும்புகிறார். இதனால், ஓய்வுபெறும் வயதை 65 என்பதற்குப் பதிலாக 64 ஆக மாற்றுவது குறித்து பரிசீலிப்பதாக அவர் கூறியிருக்கிறார். மரீனைப் பொறுத்தவரை ஓய்வுபெறும் வயது 62 எனத் தொடர்வதே தனது விருப்பம் எனத் தெரிவித்துவிட்டார். கூடவே, 20 வயதிலிருந்து பணியில் இருப்பவர்கள், 60 வயதில் ஓய்வுபெறலாம் எனும் கருத்தையும் அவர் முன்வைத்திருக்கிறார்.

நடைமுறை சார்ந்த தலைவர்

சற்று உணர்ச்சிவசப்படக்கூடியவர் என்றாலும் தனது எதிர்ப்பாளர்களையும் விமர்சகர்களையும் சந்திக்கத் தயங்காதவர் மெக்ரான். ஊதிய உயர்வில் அரசு கவனம் செலுத்தவில்லை என நேரடியாக அவரிடம் முறையிடும் அரசு ஊழியர்களிடம், தனது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 183 யூரோ (15 ஆயிரம் ரூபாய்) ஊதிய உயர்வைச் சுட்டிக்காட்டுகிறார்.

புதினுடன் சந்திப்பு...

நடைமுறை சார்ந்த போக்குகளில் கவனம் செலுத்துபவர் எனக் கருதப்படும் மெக்ரான், தேர்தல் நேரத்தில்கூட பிரச்சாரத்தில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு அதிபர் மாளிகையான எலிஸியில், வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் அமர்ந்து உக்ரைன் போர் குறித்து தீவிர ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார். உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடங்குவதற்கு முன்னதாக அந்நாட்டின் அதிபர் புதினைச் சந்தித்துப் போரைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

கடும் போட்டியைத் தரும் மரீன்

மெக்ரானுக்கு கடும் போட்டியாக களத்தில் நிற்கும் மரீனோ, மெக்ரான் ஆட்சியில் அரிசி முதல் எரிபொருள் வரை அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்திருப்பதாக விமர்சித்துவருகிறார்.

தீவிர வலதுசாரியான மரீன், குடியேற்றங்களுக்கு எதிரானவர். அவரது தந்தையும் ‘நேஷனல் ரால்லி’ கட்சியின் முன்னாள் தலைவருமான ழான்-மரீ லே பென், குடியேறிகளை, குறிப்பாக முஸ்லிம்களைக் கடுமையாக வெறுப்பவர். மரீனும் அப்படியானவர்தான். எனினும், தேர்தலை முன்னிட்டு தனது கொள்கையைச் சற்றே தளர்த்தியிருக்கிறது ‘நேஷனல் ரால்லி’ கட்சி. குடியேறிகள் குறித்து அச்சம் இல்லை; அதேசமயம் குடியேற்றச் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் எனப் பேசத் தொடங்கிவிட்டார் மரீன். முஸ்லிம்களை வெறுக்கவில்லை என்று கூறியிருக்கும் அவர், இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராகவே தான் போராடுவதாகக் கூறியிருக்கிறார். கூடவே, மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய அமைப்பு (இசிஎச்ஆர்) முஸ்லிம் குடியேறிகளுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி அதிலிருந்து பிரான்ஸ் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்திவருகிறார்.

மரீன்

உலகமயத்துக்கு எதிரான கருத்தாக்கமான பாதுகாப்புவாதம் (Protectionism) எனப்படும் கொள்கை கொண்டவர் மரீன். உள்நாட்டுச் சந்தையே பிரதானம் எனும் வகையில், இறக்குமதிகளுக்கு அதிக வரிவிதிப்பதை ஆதரிக்கும் கொள்கை அது. ஆட்சிக்கு வந்தால் இடதுசாரிகள் முதல் வலதுசாரிகள் வரை அனைவரையும் உள்ளடக்கிய அமைச்சரவை அமைக்கப்படும் என உறுதியளித்திருக்கிறார்.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியதுபோல, பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் எனும் கொள்கை அவரிடம் உண்டு. பிரெக்ஸிட் போல ‘ஃப்ரெக்ஸிட்’ வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தவில்லை என்றாலும், பெரும்பாலான பிரெஞ்சு மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரான்ஸ் இருப்பதை விரும்பவில்லை என்கிறார் மரீன்.

அடுத்து என்ன நடக்கும்?

கிட்டத்தட்ட 50 சதவீத வாக்காளர்கள் மெக்ரானுக்கும் மரீனுக்கும் வாக்களிக்கவில்லை. இதனால், இரண்டாவது சுற்றில் அவர்களைக் கவரும் முனைப்பில் இருக்கிறார்கள் இருவரும்.

இடதுசாரிகள், வலதுசாரிகளின் வாக்குகள் மெக்ரானுக்கே அதிகம் கிடைக்கும் எனத் தெரிகிறது. முன்னாள் பிரதமரும் குடியரசுக் கட்சி முன்னாள் தலைவருமான நிகோலஸ் சர்கோஸி, இரண்டாவது சுற்றில் மெக்ரானுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார். சோஷலிஸ கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான லியோனெல் ஜோஸ்பின், சோஷலிஸ கட்சியின் முக்கியத் தலைவரான பாரிஸ் பெர்ட்ராண்ட் ஆகிய இடதுசாரித் தலைவர்களும் மெக்ரானுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

முதல் சுற்றில் மெக்ரான், மரீனுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடம் பிடித்திருக்கும் ழான் லூக் மெலஞ்சன், இரண்டாவது சுற்றில் இடதுசாரி ஆதரவாளர்கள் யாரும் மரீனுக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதேசமயம், மெக்ரானுக்கு ஆதரவு தெரிவிக்கவும் அவர் முன்வரவில்லை. இடதுசாரிகளில் கணிசமானோர் இரண்டாம் சுற்றில் வாக்களிக்காமல் தவிர்க்க வாய்ப்பு அதிகம். மறுபுறம், தீவிர வலதுசாரியும், அதிபர் தேர்தலின் முதல் சுற்றில் தோல்வியடைந்தவருமான எரிக் ஸமோர் தனக்கு ஆதரவு முன்வந்திருப்பதாக வெளியான தகவல்களை மரீன் ஏற்கவில்லை.

இன்றைய நிலவரப்படி மெக்ரான் மீண்டும் அதிபராவதற்கே வாய்ப்புகள் அதிகம் என இதுவரை வெளியான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனினும் இவருக்கும், மரீனுக்கும் இடையில் நூலிழையில்தான் வேறுபாடு இருக்கிறது. எனவே, இரண்டாவது சுற்று ரொம்பவே கடுமையானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE