ரஷ்யாவைச் சார்ந்திருக்கும் இந்தியாவின் நிலையை பிரிட்டனால் மாற்றிவிட முடியுமா?

By காமதேனு

இந்தியாவுக்கு வருகைதரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய - ரஷ்ய உறவில் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் முடிவோடுதான் வருகிறார் எனத் தெரிகிறது. குறிப்பாக, ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் ராணுவத் தளவாடங்களைச் சாந்திருக்கும் நிலையிலிருந்து இந்தியா வெளியேற உதவும் யோசனைகளை பிரதமர் மோடியிடம் அவர் முன்வைப்பார் என்று பிரிட்டன் பிரதமரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

அழுத்தம் கொடுக்கும் மேற்கத்திய நாடுகள்

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உன்னிப்பாகக் கவனித்துவருகின்றன. ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், அந்நாட்டுடனான வர்த்தக உறவை இந்தியா தயக்கமின்றி தொடர்கிறது. குறிப்பாக, தள்ளுபடி விலையில் ரஷ்யா வழங்கும் கச்சா எண்ணெய்யை வாங்குவது, ராணுவத் தளவாட இறக்குமதியைத் தொடர்வது, மருத்துவ சாதனங்களை ஏற்றுமதி செய்வது என இந்தியா தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.

போர் நிறுத்தத்தை விரும்பினாலும் ரஷ்யா விஷயத்தில் நேரடியான எதிர்ப்பை இதுவரை இந்தியா காட்டவில்லை. ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் வாக்களிக்காமலும் விலகி நின்றது.

இதனால் இந்தியாவுக்கு வரும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு குறித்து நேரடியாகவும், சூசகமாகவும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அமெரிக்க அரசின் சர்வதேசப் பொருளாதாரத்துக்கான தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராகப் பதவி வகிக்கும் தலீப் சிங், கடந்த மாதம் இந்தியா வந்திருந்தார். அப்போது, தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வது பொருளாதாரத் தடைகளுக்கு வழிவகுக்கலாம் என அவர் எச்சரித்திருந்தார். அமெரிக்காவிலிருந்தும் இப்படியான குரல்கள் அடிக்கடி ஒலிக்கின்றன. “நாங்கள் விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை ஒவ்வொரு நாடும் பின்பற்ற வேண்டும். இதை உலகம் முழுவதும் நாங்கள் அமல்படுத்துகிறோம்” என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் ஸாகி கடந்த மாதம் கூறியிருந்தார். ரஷ்ய ஆயுதங்களுக்குப் பதிலாக அமெரிக்க ஆயுதங்களை இந்தியா வாங்கும்படி செய்ய முயற்சிப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின் கூறியிருந்தார்.

இந்தச் சூழலில், பிரிட்டன் பிரதமர் எனும் முறையில் முதன்முறையாக இந்தியாவுக்கு வருகிறார் போரிஸ் ஜான்சன். இரண்டு நாள் பயணமாக நாளை (ஏப்.21) இந்தியா வந்தடையும் அவர், பிரதமர் மோடியுடனான சந்திப்புகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்துப் பேசவிருக்கிறார்.

இந்நிலையில், ரஷ்ய ராணுவத் தளவாடங்கள் இறக்குமதியைத் தொடர்வது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என அமெரிக்கா மறைமுகமாக எச்சரித்துவருகிறது. இந்நிலையில் இந்த விவகாரங்கள் தொடர்பாகப் பிரதமர் மோடியிடம் போரிஸ் ஜான்சன் விரிவுரையாற்றவெல்லாம் மாட்டார் என்று பிரிட்டன் செய்தித்தொடர்பாளர் கூறியிருக்கிறார். எனினும், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் ராணுவத் தளவாடங்களைச் சாந்திருக்கும் நிலையிலிருந்து இந்தியா வெளியேற உதவும் யோசனைகளை போரிஸ் முன்வைப்பார் என பிரிட்டன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

மறுபுறம், “இதுகுறித்த விஷயங்களை மரியாதையான முறையில் பிரிட்டன் பிரதமர் பேசினால், இந்தியா அதைக் கவனமாகச் செவிமடுக்கும். எனினும், இந்தியாவின் வியூக அடிப்படையிலான நட்பு நாடு எனும் நிலையிலிருந்து ரஷ்யாவை மாற்றுவதற்கு பிரிட்டனுக்கு அவ்வளவாகச் சாத்தியமில்லை” என டெல்லியில் இயங்கிவரும் கொள்கை ஆய்வுகளுக்கான சொசைட்டி எனும் அமைப்பின் இயக்குநர் உதய் பாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

“ரஷ்யாவைச் சார்ந்திருக்கும் இந்தியாவின் நிலையை மாற்ற பிரிட்டனால் முடியாது. ஏனெனில், இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்குப் போதுமான எண்ணெயோ, ராணுவத் தளவாடங்களோ அந்நாட்டிடம் இல்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE