‘இனி நான் ரொம்பவே ஆபத்தானவன்!’ - எச்சரிக்கும் இம்ரான் கான்

By சந்தனார்

கடைசிப் பந்துவரை அடித்து ஆடப்போவதாகச் சொல்லி, இறுதிவரை பதவியை விட்டுத்தராமல் போராடிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பதவி இழந்த பின்னரும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிவருகிறார். அவரது கட்சியின் சார்பில் தொடர்ந்து பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

பெஷாவரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “நாடாளுமன்றத்தில் ஓர் அங்கமாக இருந்த வரைக்கும் நான் ஆபத்தானவனாக இருக்கவில்லை. ஆனால், இனி மிகவும் ஆபத்தானவனாக இருப்பேன்” என்று பேசியிருக்கிறார்.

இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது தொடர்பான வழக்கை ஏப்ரல் 9-ம் தேதி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அன்றைய தினமே வாக்கெடுப்பை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பை நடத்த அப்போதைய சபாநாயகர் ஆஸாத் கைஸர் நள்ளிரவு வரை முன்வரவில்லை. இந்தச் சூழலில் உச்ச நீதிமன்றம் நள்ளிரவு வரை திறந்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பான மற்றொரு வழக்கை விசாரிக்கும் வகையில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றமும் நள்ளிரவு வரை இயங்கியது. பின்னர் ஆஸாத் கைஸர் பதவி விலகினார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியைச் சேர்ந்த அயாஸ் சாதிக் சபாநாயகர் ஆனார். இதன் பின்னர் வாக்கெடுப்பு நடந்தது. 342 பேர் கொண்ட தேசிய அவையில், 174 பேர் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்தது. பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவிநீக்கம் செய்யப்பட்ட முதல் பிரதமர் இம்ரான் கான் தான்.

இந்நிலையில், நீதிமன்றங்கள் நள்ளிரவு வரை திறந்துவைக்கப்பட்டது குறித்தும் பெஷாவர் கூட்டத்தின்போது கேள்வி எழுப்பினார் இம்ரான் கான். “ஏன் இரவிலும் நீதிமன்றங்கள் திறந்திருந்தன? நான் சட்டத்தை மீறிவிட்டேனா என்ன?” என்று அவர் கூறினார். நீதித் துறை சுதந்திரமாக இயங்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், தனது ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையிலும் அரசு நிறுவனங்களுக்கு எதிராக மக்களை ஒருபோதும் தூண்டிவிட்டதில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, நீதித் துறையை இம்ரான் கான் களங்கப்படுத்துவதாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் புட்டோ சர்தாரி, பாகிஸ்தான் முஸ்லிம் லீன்(என்) கட்சியின் ஆஸன் இக்பால் போன்ற தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டம் மீறப்பட்டதாலேயே நீதிமன்றங்கள் இரவு வரை திறக்கப்பட்டிருந்தன என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

தனது அரசைக் கவிழ்க்க வெளிநாட்டு சதி நடந்ததாகத் தொடர்ந்து குற்றம்சாட்டிவரும் இம்ரான் கான், ஷெபாஸ் ஷெரீஃப் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசை ‘இறக்குமதி அரசு’ என்றே விமர்சிக்கிறார். பெஷாவர் கூட்டத்தில் உரையாற்றும்போது, “இந்தக் கொள்ளைக்காரர்களை நம் மீது திணித்ததன் மூலம், பாகிஸ்தானை அவமதித்துவிட்டது அமெரிக்கா. ஜுல்பிக்கார் அலி புட்டோ அமெரிக்காவின் சதியால் ஆட்சியைவிட்டு அகற்றப்பட்டார். ஆனால், இது 1970-ன் பாகிஸ்தான் அல்ல. இது புதிய பாகிஸ்தான்” என்று இம்ரான் சுட்டிக்காட்டினார். பாகிஸ்தானில் ஒருவரின் ஆட்சி அகற்றப்பட்டால் மக்கள் அதைக் கொண்டாடுவதுதான் வழக்கம் என்று குறிப்பிட்ட இம்ரான் கான், இந்த முறை தனக்கு ஆதரவாகப் பொதுக்கூட்டங்களில் அதிக அளவில் மக்கள் கலந்துகொள்வதாகக் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE