நியூயார்க் சுரங்க ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதத் தாக்குதலா?

By காமதேனு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளினின் மெட்ரோ சுரங்க ரயில் நிலையத்தில், அமெரிக்க நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு ஒரு மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் குறைந்தது 13 பேர் காயமடைந்தனர் என ஏஎஃப்பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது. தாக்குதல் நடத்திய நபர் இன்னமும் பிடிபடவில்லை. அந்தப் பகுதியில் அவர் சுற்றித்திரிவதாகப் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தின்போது வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலைத் தொடர்ந்து அந்தத் தடத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டன.

விசாரணை நடப்பதால் 36-வது தெரு மற்றும் 4-வது அவென்யூ பகுதியைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என நியூயார்க் நகர போலீஸார் கோரியிருக்கின்றனர். வெடிபொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என ஆரம்பத்தில் போலீஸார் தெரிவித்திருந்தனர். எனினும், வெடிக்காத நிலையில் சில வெடிபொருட்கள் கண்டறியப்பட்டிருப்பதாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகான காட்சிகள் அடங்கிய பல காணொலிகள் சமூகவலைதளங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டன. ஒருவர் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், காயமடைந்தவர்கள் காட்டப்படுகின்றனர். ஏதோ ஒரு பொருள் எரிவதாகவும் புகை வருவதாகவும் அதில் காட்டப்படுகிறது. ரத்தக்காயத்துடன் விழுந்து கிடப்பவர்களுக்கு, சக பயணிகள் உதவுவதும் பதிவாகியிருக்கிறது.

இதற்கிடையே இது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் எனப் பலரும் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்திருக்கின்றனர். எனினும் இது பயங்கரவாதத் தாக்குதல் என நியூயார்க் காவல் துறையினர் இதுவரை அறிவிக்கவில்லை.

அமெரிக்காவில் துப்பாக்கிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் புதிய நடவடிக்கைகள் தொடங்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்த மறுநாளில் இந்தத் தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE