‘அந்த வகை ஏவுகணை எங்களிடம் இல்லை... அது உக்ரைனுடையது!’

By சந்தனார்

உக்ரைனின் க்ராமடோர்ஸ்க் நகர ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆகியிருக்கிறது. 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவமனைகளில் போதிய இடம் இல்லை என க்ராமடோர்ஸ்க் நகர மேயர் அலெக்சாண்டர் ஹாஞ்சாரெங்கோ தெரிவித்திருக்கிறார். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் அதிபர் ஸெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்திருக்கிறார். காணொலி மூலம் பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரையாற்றிய அவர், “க்ராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தின் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தினர். ஒரு சாதாரண ரயில் நிலையத்தின் மீது, சாமானிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். தாக்குதல் நடந்தபோது அங்கு உக்ரைன் வீரர்கள் இல்லை” எனக் கூறியிருக்கிறார். தாக்குதல் நடந்த சமயத்தில் அந்த ரயில் நிலையத்தில் 4,000-க்கும் அதிகமானோர் இருந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என மேயர் அலெக்சாண்டர் ஹாஞ்சாரெங்கோ குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையே, இந்தத் தாக்குதலில் ஈடுபடவில்லை என ரஷ்யா மறுத்திருக்கிறது. தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை உக்ரைனிடம் மட்டுமே இருக்கிறது என்று ரஷ்யப் பாதுகாப்புத் துறை தெரிவித்திருக்கிறது. மார்ச் 14-ல் டோனெட்ஸ்க் பகுதியில் உக்ரைன் ராணுவத்தினர் இதே வகை ஏவுகணையைச் செலுத்தி தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா கூறியிருக்கிறது.

உக்ரைனை ஊடுருவியது முதல் இதுவரை பொதுமக்கள் கொல்லப்பட்ட எந்தச் சம்பவத்திலும், தங்களுக்குத் தொடர்பில்லை என்றே ரஷ்யா கூறிவருவது குறிப்பிடத்தக்கது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE