‘அண்டை நாட்டு அண்ணன்’ - ஜெயசூர்யா நெகிழ்ச்சி!

By காமதேனு

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியிருக்கும் நிலையில், மிகவும் நெகிழ்ந்துபோயிருக்கிறார் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா.

பெருந்தொற்றால் சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட முடக்கம், ராஜபக்ச குடும்ப அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், திட்டமிடப்படாத நடவடிக்கைகளால் அந்நியச் செலாவணி கையிருப்பு கரைந்து, வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் தவித்துக்கொண்டிருக்கிறது இலங்கை. எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாததால், பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசை, உணவுப் பொருட்கள் விலை உயர்வு என ஏகப்பட்ட பிரச்சினைகள் இலங்கையை வாட்டிவருகின்றன. டீசல் இல்லாததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாகக் கடும் மின்வெட்டைச் சந்திக்கிறார்கள் இலங்கை மக்கள். கோத்தபய ராஜபக்ச அரசு பதவிவிலக வேண்டும் என்று மக்கள் ஆக்ரோஷமாகப் போராடிவருகிறார்கள்.

இந்தச் சூழலில், இதுவரை 2.70 லட்சம் மெட்ரிக் டன் எரிபொருளை இலங்கைக்கு வழங்கியிருக்கிறது இந்தியா. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 36,000 மெட்ரிக் டன் பெட்ரோலையும், 40,000 மெட்ரிக் டன் டீசலையும் இந்தியா வழங்கியிருக்கிறது. மருந்து பொருட்களின் தட்டுப்பாட்டைக் குறைக்கவும் இந்தியா முன்வந்திருக்கிறது.

இந்நிலையில், இந்தியா வழங்கியிருக்கும் உதவிகளால் நெகிழ்ந்துபோயிருக்கும் ஜெயசூர்யா, “அண்டை நாடு எனும் முறையிலும் அண்ணன் எனும் முறையிலும் எங்களுக்கு எப்போதுமே இந்தியா உதவியிருக்கிறது. இந்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் நாங்கள் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். தற்போதைய சூழலில் தாக்குப்பிடிப்பது என்பது எங்களுக்கு எளிதான விஷயம் அல்ல. இந்தியா மற்றும் பிற நாடுகளின் உதவியுடன் மீண்டுவிடுவோம் என நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

கடனுதவியாக 1 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் 7,500 கோடி ரூபாய்) ஏற்கெனவே இந்தியா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE