உக்ரைன் அமைச்சருடன் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் பேசியது என்ன?

By காமதேனு

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்குத் தார்மிக ரீதியில் ஆதரவளிக்கிறது சீனா. ரஷ்யாவுக்கு எதிராக ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களின் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் சீனா தவிர்த்துவிட்டது. ரஷ்யாவின் நட்பு நாடான சீனா, இந்த விவகாரத்தில் தலையிட்டு போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் என உக்ரைன் வலியுறுத்திவருகிறது.

இந்தச் சூழலில், உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் த்மித்ரோ குலேபாவுடன் நேற்று தொலைபேசியில் பேசியிருக்கிறார் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி.

அப்போது, “போர்கள் எப்படியாவது முடிவுக்கு வந்துவிடும். எனினும், போரால் ஏற்பட்டிருக்கும் வலியை எதிர்கொள்வது என்பதுதான் சவால். ஐரோப்பாவின் பாதுகாப்பு ஏற்பாட்டில் சமநிலையுடன் கூடிய திறன்வாய்ந்த, நீடித்திருக்கக்கூடிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று குலேபாவிடம் கூறிய வாங் யி, “இவ்விஷயத்தில் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க சீனா தயாராக இருக்கிறது” என்றும் உறுதியளித்திருக்கிறார்.

இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் குலேபா, “பாதிக்கப்பட்ட (உக்ரைன்) மக்களுக்கு ஆதரவு தெரிவித்த சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யிக்கு நன்றி. உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவருவது என்பது, அமைதி, உலகளாவிய உனவுப் பாதுகாப்பு, சர்வதேச வர்த்தகம் ஆகியவற்றின் நலனைப் பாதுகாக்க வழிவகுக்கும் எனும் கருத்தை நாங்கள் இருவரும் பகிர்ந்துகொண்டோம்” எனக் கூறியிருக்கிறார்.

மார்ச் 1-ம் தேதிக்குப் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான உயர் மட்ட உரையாடல் நிகழ்ந்திருப்பது இதுவே முதல் முறை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE