இம்ரான் பரிந்துரைத்த இடைக்காலப் பிரதமர் யார்?

By காமதேனு

பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி குல்ஸார் அகமதுவைப் பரிந்துரைத்திருக்கிறார் இம்ரான் கான். இதுதொடர்பாக, இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் உயர்மட்டக் குழு கூடி முடிவெடுத்ததாக அக்கட்சியைச் சேர்ந்தவரும் அமைச்சருமான ஃபவாத் சவுத்ரி தெரிவித்திருக்கிறார்.

அரசமைப்புச் சட்டத்தின் 224-ஏ1 கூறின்படி இடைக்காலப் பிரதமர் நியமிக்கப்படுகிறார். இடைக்காலப் பிரதமர் பதவிக்கான தகுதியான நபர்களின் பெயர்களைப் பரிந்துரைக்குமாறு, பிரதமர் இம்ரான் கான், எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீஃப் ஆகியோரிடம் பாகிஸ்தான் அதிபர் டாக்டர் ஆரிஃப் ஆல்வி கேட்டிருந்தார். அரசமைப்புச் சட்டக்கூறு 58(1)-ன்படி நாடாளுமன்றமும், அமைச்சரவையும் கலைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இடைக்காலப் பிரதமர் பதவியேற்கும் வரை, பிரதமர் பதவியில் இம்ரான் கான் தொடர்வார் என்றும் அதன் பின்னர் அரசமைப்புச் சட்டக்கூறு 224-ஏ(4)-ன்படி இடைக்காலப் பிரதமர் பதவியேற்பார் என்றும் அதிபர் தெரிவித்திருக்கிறார்.

எனினும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் (பிஎம்எல்என்-பி)கட்சித் தலைவரான ஷெபாஸ் ஷெரீஃப் இந்த ஏற்பாட்டை ஏற்கவில்லை. இது சட்டவிரோதம் என்றும், பிரதமரும் அதிபரும் சட்டத்தை மீறிவிட்டனர் என்றும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார். இந்தச் சூழலில் குல்ஸார் அகமது இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

கராச்சிக்காரர்

1957 பிப்ரவரி 2-ல் கராச்சியில் நூர் முகமது எனும் புகழ்பெற்ற வழக்கறிஞரின் குடும்பத்தில் பிறந்தவர் குல்ஸார் அகமது. கராச்சியின் குலிஸ்தான் பள்ளியில் படித்த அவர், அந்நகரில் உள்ள அரசு தேசிய கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், எஸ்.எம்.சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார்.

1986 ஜனவரி 18-ல் வழக்கறிஞராகப் பதிவுசெய்துகொண்ட அவர், 1988 ஏப்ரல் 4-ம் தேதி முதல் உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். 2001 செப்டம்பரில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரானார். 1999-2000-ல் கராச்சியின் சிந்து உயர் நீதிமன்ற பார் அசோசியேஷனின் கவுரவச் செயலாளரானார்.

வழக்கறிஞராக சிவில் - கார்ப்பரேட் சார்ந்த வழக்குகளையே அதிகம் கையாண்ட அவர், உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியிருக்கிறார். 2002 ஆகஸ்ட் 27-ல் சிந்து உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2011 நவம்பர் 16-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியானார். 2019 டிசம்பர் 21-ல் பாகிஸ்தானின் 27-வது தலைமை நீதியாகப் பொறுப்பேற்றார். 2022 பிப்ரவரி வரை தலைமை நீதியாக அவர் பதவிவகித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE