இலங்கைக்கு உதவ வேண்டும் இந்தியா!

By காமதேனு

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு இந்தியா உதவ வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு / தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் வெகுண்டெழுந்து அரசுக்கு எதிராகப் போராடிவருகிறார்கள் இலங்கை மக்கள். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச, அண்ணன் சமல் ராஜபக்ச, தம்பி பசில் ராஜபக்ச உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் நேற்று இரவு ராஜினாமா செய்தனர். தங்கள் ராஜினாமா கடிதத்தைப் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் அவர்கள் அளித்தனர்.

இதையடுத்து, புதிய அமைச்சரவையை உருவாக்கும் பணிகளில் அதிபர் கோத்தபய ராஜபக்ச இறங்கினார். அமைச்சரவைப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண தன்னுடன் இணைந்து பணிபுரியுமாறு அனைத்துக் கட்சியினருக்கும் அவர் அழைப்பு விடுத்தார். அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து ஜனநாயக வழியில் இதற்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கோரியிருக்கிறார்.

இந்நிலையில், இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இன்று பேசிய பிரேமதாசா, “அமைச்சர்களின் ராஜினாமா, மக்களை முட்டாளாக்க நடத்தப்பட்ட நாடகம். இலங்கை சமுகத்துக்கு நன்மை விளைவிக்கவும், மக்களுக்கு நிவாரணம் அளிக்கவும் நேர்மையான முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மக்களுக்கு உடனடி நிவாரணம் தேவை. மக்களின் உயிரையும் உரிமைகளையும் பாதுகாக்கவே நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

தேர்தல் நடத்தப்பட்டால் அதில் போட்டியிடத் தனது ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (எஸ்ஜேபி) தயாராக இருப்பதாகக் கூறிய பிரேமதாசா, “சாத்தியமுள்ள எல்லா வழிகளிலும் இலங்கைக்கு உதவ இந்தியப் பிரதமர் மோடி முயற்சி செய்ய வேண்டும். இலங்கை எங்கள் தாய்மண், அதை நாங்கள் காப்பாற்றியாக வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE