இலங்கை அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா: இனி என்ன நடக்கும்?

By காமதேனு

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச, அண்ணன் சமல் ராஜபக்ச, தம்பி பசில் ராஜபக்ச உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் நேற்று இரவு ராஜினாமா செய்துவிட்ட நிலையில் அடுத்து என்ன நடக்கும் எனும் கேள்வி உருவாகியிருக்கிறது.

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கடும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக, உணவு, மருந்து, எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளில் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டையும், இதற்கு வழிவகுத்த அரசின் தவறான முடிவுகளையும் கண்டித்து மக்கள் உச்சகட்டப் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.

அதிபர் கோத்தபய ராஜபக்சவின் இல்லம் அருகே போராட்டம் நடத்தியவர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர். நெருக்கடி நிலையையும் இலங்கை அரசு அமல்படுத்தியிருக்கிறது. இதற்கிடையே, நேற்று ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டன. எனினும், கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து 15 மணி நேரத்தில் அந்த முடக்கம் விலக்கப்பட்டது.

கடும் பாதுகாப்பு நெருக்கடிக்கு நடுவிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடக்கின்றன. நேற்று மதியம், கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பலர், கொழும்பு புறநகர்ப் பகுதியான நுகேகொடையில் கூடி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையிலும், போராட்டத்தை மாணவர்கள் தொடர்ந்து நடத்தினர். இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் உள்ள பேராதனை பல்கலைக்கழக மாணவர்களும் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கூட்டத்தை போலீஸார் கலைத்தனர்.

இந்தக் களேபரங்களுக்கு நடுவே, பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலகிவிட்டதாக நேற்று செய்திகள் வெளியாகின. ஆனால், பிரதமர் அலுவலகம் அதை மறுத்ததுடன் அப்படியான திட்டம் எதுவும் இல்லை என்றும் உறுதியாகத் தெரிவித்தது.

இந்தச் சூழலில், அமைச்சரவையின் 26 அமைச்சர்களும் நேற்று இரவு ராஜினாமா செய்தனர். தங்கள் ராஜினாமா கடிதத்தை, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அவர்கள் அனுப்பிவைத்தனர். இதையடுத்து, இன்று காலை அதிபர் கோத்தபய ராஜபக்சவைச் சந்திக்கிறார் மகிந்த ராஜபக்ச. தற்காலிக அரசை உருவாக்குமாறு கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்திவரும் நிலையில், புதிய அமைச்சரவையை அதிபர் கோத்தபய ராஜபக்ச உருவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE