பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு!

By காமதேனு

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்ற அதிபர் ஆரீப் அல்வி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். 90 நாட்களுக்குள் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுதான் காரணம் எனக் குற்றம்சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தன. ஆனால், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை துணை சபாநாயகர் நிராகரித்தார். அத்துடன் இது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அவர் அறிவித்தார்.

இம்ரான் கான்.

இதனைத் தொடர்ந்து புதிதாக தேர்தல் நடைபெறும் என பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்,‘‘நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு அதிபருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தலுக்கு தயாராகுமாறு பாகிஸ்தான் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிராக வெளிநாடுகள் செய்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது’’ எனக் கூறினார்.

பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்ற அதிபர் ஆரீப் அல்வி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இதனையடுத்து, 90 நாட்களில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நீதிமன்றம் செல்லப்போவதாக எதிர்கட்சிகள் கூறியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE