கும்பல் கொலைக்கு எதிரான சட்டம்: அமெரிக்க வரலாற்றின் மைல்கல்!

By சந்தனார்

உக்ரைன் போர் குறித்த செய்திகள் சர்வதேச அளவில் அதிகமாகப் பேசப்படும் நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் கும்பல் கொலைகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட மசோதா அதிக கவனம் பெறவில்லை.

1900-ல் ஜார்ஜ் ஹென்றி ஒயிட் எனும் கறுப்பின எம்.பி முதன்முதலாக கும்பல் கொலைக்கு எதிரான மசோதாவைக் கொண்டுவந்தார். அப்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் ஒருவர் மட்டும்தான் கறுப்பினத்தைச் சேர்ந்தவர். எதிர்பார்த்தது போலவே அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. இதுவரை 200-க்கும் மேற்பட்ட முறை இது தொடர்பான மசோதாக்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு தோற்கடிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தச் சட்ட மசோதாவுக்கு ‘எம்மெட் டில் - கும்பல் கொலைக்கு எதிரான சட்டம்’ எனப் பெயரிடப்படிருக்கிறது. அந்த வகையில் அமெரிக்காவின் இருண்ட பக்கங்களின் சாட்சியமாக இந்தப் புதிய மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மூன்று வெள்ளையின உறுப்பினர்கள் மட்டுமே இதை எதிர்த்து வாக்களித்தனர். மற்ற அனைவரும் ஆதரவாக வாக்களித்ததால், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்ட வடிவம் பெறுகிறது. இந்தச் சட்டத்தின்படி, வெறுப்புக் குற்றத்தின் அடிப்படையில் கும்பல் கொலை முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் (தாக்கப்படும் நபர் உயிரிழந்தாலும், காயமடைந்தாலும்), 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். இது எம்மெட் டில்லுக்குக் கிடைத்திருக்கும் நீதியாகப் பார்க்கப்படுகிறது.

சிகாகோ நகரைச் சேர்ந்த எம்மெட் டில் எனும் 14 வயது கறுப்பினச் சிறுவன் 1955 ஆகஸ்ட் மாதம், கோடை விடுமுறைக்காக மிசிஸிபியில் உள்ள தனது தாத்தாவின் வீட்டுக்குச் சென்றிருந்தான். அங்கு தங்கியிருந்த சமயத்தில், ஒரு பல்பொருள் அங்காடிக்கு அவன் சென்றிருந்தான். அப்போது, அங்காடியின் கல்லாவில் அமர்ந்திருந்த கரோலின் பிரையாண்ட் எனும் பெண், எம்மெட் தன்னைக் கிண்டல் செய்ததாகவும், ஆபாசமாக நடந்துகொண்டதாகவும் குற்றம்சாட்டினார். அது பொய்ப் புகார் என பின்னாட்களில் அவர் ஒப்புக்கொண்டார்.

ஓரிரு நாட்கள் கழித்து, அதிகாலை 2 மணிக்கு அவளது கணவரும் அங்காடியின் உரிமையாளருமான ராய் ப்ரையான்ட், தனது உறவினர் ஜே.டபிள்யூ.மைலமுடன் எம்மெட்டின் தாத்தாவின் வீட்டுக்குள் புகுந்து, தூங்கிக்கொண்டிருந்த அந்தச் சிறுவனைக் கட்டிப்போட்டு, தங்கள் வேனின் பின்புறம் வைத்துக் கடத்திச் சென்றார். இருவரும் மிகக் கொடூரமாகச் சித்ரவதை செய்து அந்தச் சிறுவனைக் கொன்றனர். பெரும் அதிர்வை ஏற்படுத்திய அந்தச் சம்பவத்தில் ராய் ப்ரையான்ட்டும், மைலமும் கைதுசெய்யப்பட்டாலும், ஒரு மாதம் கழித்து நடந்த நீதிமன்ற விசாரணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

எம்மெட் டில்லுக்கு நேர்ந்த கொடுமையை உலகம் பார்க்கட்டும் என அவனது சடலத்தைச் சிதைந்த நிலையிலேயே சவப்பெட்டியில் வைத்திருந்தார் அவனது தாய் மாமீ டில்

எம்மெட்டின் படுகொலையும், வெள்ளையினக் குற்றவாளிகளுக்கு விரைவில் வழங்கப்பட்ட விடுதலையும், சிவில் உரிமை இயக்கத்தின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தின.

இத்தனைக்குப் பின்னரும், அமெரிக்காவில் கும்பல் கொலைகளுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவருவது சாத்தியமில்லாமல் இருந்தது. ஏராளமான கறுப்பின மக்கள் கும்பல் கொலைக்குள்ளாகியிருக்கிறார்கள்.

இந்தச் சூழலில், அமெரிக்காவில் கும்பல் கொலைக்கு எதிரான சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தச் சட்ட முன்வடிவில் கையெழுத்திட்டிருப்பது வரலாற்றுத் தருணமாகப் பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE