இஸ்ரேலில் 5 பேர் சுட்டுக்கொலை: ஒரே வாரத்தில் மூன்றாவது தாக்குதல்!

By காமதேனு

இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் அருகில் உள்ள பினேய் பிரேக் பகுதியில் நேற்று இரவு பைக்கில் வந்த ஒரு நபர், துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய நபர் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். உயிரிழந்தவர்களில் ஒருவர் காவல் துறையைச் சேர்ந்தவர் என்கின்றன இஸ்ரேல் ஊடகச் செய்திகள்.

தாக்குதலில் ஈடுபட்டவர், மேற்குக் கரையின் யாபாத் நகரைச் சேர்ந்த 27 வயது இளைஞர் என்று இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. எனினும், கொலையாளி குறித்து காவல் துறை சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. ரம்ஜான் புனித நோன்பு தொடங்கவிருக்கும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் இஸ்ரேலில் நடந்திருக்கும் மூன்றாவது தாக்குதல் இது.

பொதுவாக இஸ்ரேலில் இப்படியான தாக்குதல்களில் அரபு குடிமக்கள் ஈடுபடுவதில்லை என்பதால் இந்தத் தாக்குதல்கள் ஆச்சரியம் ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தத் தாக்குதல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகின்றனவா அல்லது தனிநபர்கள் தன்னிச்சையாகத் தாக்குதலில் ஈடுபடுகிறார்களா என்பது குறித்தும் இஸ்ரேல் அதிகாரிகள் இன்னமும் உறுதியாக எதையும் தெரிவிக்கவில்லை.

கடந்த வாரம், இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள பீர்ஷெபா நகரில் ஒருவர் காரில் சென்று மோதி கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27) இஸ்ரேலின் மத்திய பகுதியில் உள்ள ஹதேரா நகரில் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர்.

முந்தைய இரு தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேலைச் சேர்ந்த அரபு குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகளில் தாக்கம் பெற்று இந்தத் தாக்குதல்களில் அவர்கள் ஈடுபட்டதாகக் கருதப்படுகிறது.

இந்தச் சம்பவங்களையடுத்து அரசு குடிமக்கள் பலரது வீடுகள் சோதனையிடப்பட்டிருக்கின்றன. 12 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் இருவர் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற தொடர் தாக்குதல்களை முன்வைத்து கடுமையாக எதிர்வினையாற்றுகிறது இஸ்ரேல் அரசு. கொலைகார அரபு பயங்கரவாத அலையை இஸ்ரேல் எதிர்கொள்வதாக அந்நாட்டின் பிரதமர் நஃப்தாலி பென்னட் கூறியிருக்கிறார். இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசரக் கூட்டம் நடத்தியிருக்கும் அவர், இன்று (மார்ச் 30) பாதுகாப்பு அமைச்சகத்தின் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE