ரஷ்யப் படைகளின் தாக்குதலில் பலியான ரஷ்ய ஊடகர்!

By காமதேனு

உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் தாக்குதல்கள் தொடர்பாகச் செய்தி சேகரித்துவரும் பணியில் உயிரைப் பணயம் வைத்து ஈடுபட்டிருக்கிறார்கள் ஊடகர்கள். இந்தப் போரில் ரஷ்யத் தாக்குதலில் ஏற்கெனவே 4 ஊடகர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்த வரிசையில், ரஷ்ய செய்தி இணையதளமான ‘இன்ஸைடர்’ இதழில் பணிபுரிந்துவந்த ஒக்ஸானா பவ்லினா, உக்ரைன் தலைநகரான கீவில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலில் உக்ரைனியர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

42 வயதான ஒக்ஸானா, ‘டைம் அவுட் மாஸ்கோ’, ‘இன் ஸ்டைல்’ போன்ற லைஃப்ஸ்டைல் இதழ்களில் பணிபுரிந்துவந்தவர். பின்னர் அரசியல் தொடர்பான பணிகளில் நுழைந்த அவர், ஊழலுக்கு எதிராக ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி நடத்திவந்த அறக்கட்டளையில் இணைந்து பணியாற்றினார்.

நவால்னியின் அறக்கட்டளையிலிருந்து ஒருமுறை நேரலை நிகழ்ச்சி ஒன்றை அவர் நடத்திக்கொண்டிருந்தபோது அதிரடியாக உள்ளே நுழைந்த ரஷ்ய போலீஸார் அவரையும் வேறு சிலரையும் கைதுசெய்தனர். பின்னர், அந்த அறக்கட்டளை ஒரு தீவிரவாத அமைப்பு எனக் கடந்த ஆண்டு ரஷ்ய அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து அவர் ரஷ்யாவைவிட்டு வெளியேறினார். எனினும், வெளியில் இருந்தபடியே இன்ஸைடர், கோடா ஸ்டோரி போன்ற இதழ்களிலும் பணியாற்றிவந்தார்.

அவரது மறைவு குறித்து செய்தி வெளியிட்டிருக்கும் இன்ஸைடர் இணையதளம், “உக்ரைன் போர் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து செய்தி வெளியிடுவோம். குறிப்பாக, குடியிருப்புப் பகுதிகளில் குண்டுவீச்சு நடத்தி பொதுமக்களையும் பத்திரிகையாளர்களையும் கொல்லும் ரஷ்யாவின் போர்க் குற்றம் குறித்து தொடர்ந்து செய்தி வெளியிடுவோம்” என்று குறிப்பிட்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE