உக்ரைன் போர்: பிரிட்டனிடம் அடைக்கலம் கோரும் முதல் ரஷ்யத் தம்பதி!

By சந்தனார்

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிராக முதல் நாளிலேயே குரல் கொடுத்த ரஷ்யத் தம்பதியினர், பெரும்பாடுபட்டு ரஷ்யாவிலிருந்து வெளியேறி பிரிட்டனை அடைந்திருக்கின்றனர். அந்நாட்டிடம் அடைக்கலம் கோரிக் காத்திருக்கும் அவர்கள், சொந்த நாட்டின் அரசு தவறிழைக்கும்போது விமர்சனம் செய்யத் தயங்காத நேர்மையாளர்களாகப் பாராட்டப்படுகிறார்கள்.

பிப்ரவரி 24-ல் உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களில், ‘உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பு கூடாது. போர் வேண்டாம்’ என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் அந்தத் தம்பதியினர் போராட்டத்தைத் தொடங்கினர் (இருவரின் ஊர் மற்றும் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை). அப்போது இருவரையும் கடந்துசென்ற ஒரு மூதாட்டி, “என்ன பைத்தியக்காரத்தனம் இது? உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுங்கள்” என்று கூறினார். அது அந்தத் தம்பதியினருக்கு ஆச்சரியமளிக்கவில்லை. ஏனெனில், புதினின் ஆதரவாளர்கள் நிறைந்திருக்கும் நகரம் அது.

2014-ல் க்ரைமியாவை ரஷ்யா ஆக்கிரமித்தது முதல், கடந்த 8 ஆண்டுகளாகப் பெருமளவிலான பிரச்சாரங்களை முன்னெடுத்து தனது அரசின் எல்லா நடவடிக்கைகளையும் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் மக்களைத் தள்ளியிருக்கிறார் புதின் (அதையும் தாண்டி இந்தத் தம்பதியினரைப் போல பலரும் உக்ரைன் போருக்கு எதிராகக் குரல் கொடுத்த சம்பவங்கள் ஏராளம். அவர்களில் பெரும்பாலானோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் போராடிய அதே நாளில், இன்னொரு நகரில் ஒற்றை ஆளாக நின்று போருக்கு எதிராகப் போராடிய ஒரு பெண் கைதுசெய்யப்பட்டார்).

பின்னர் போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனியர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ, 50 யூரோக்களை ஒரு தொண்டு நிறுவனத்துக்கு இருவரும் வழங்கினர். அப்படி நன்கொடை அளிப்பவர்களுக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்க ரஷ்யா சட்டம் கொண்டுவந்திருப்பதாக, பின்னர்தான் அவர்களுக்குத் தெரியவந்தது. இப்படி வரிசையாக ஏகப்பட்ட சட்டங்களைக் கொண்டுவந்து, உக்ரைனுக்கு ஆதரவான குரல்களை ரஷ்யா நசுக்கிவருவதாக அந்தத் தம்பதியினர் தெரிவித்திருக்கின்றனர்.

இப்படியான ஒரு சூழலில் ரஷ்யாவில் தொடர்ந்து வசிக்க முடியாது என நினைத்த இருவரும் அந்நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்தனர். நல்லவேளையாக, கடந்த ஆண்டே அவர்கள் பிரிட்டனில் உள்ள தங்கள் நண்பர்களைச் சந்திக்க ‘வருகை விசா’வுக்கு விண்ணப்பித்திருந்தனர். உக்ரைன் எல்லையில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டிருந்த அந்தக் காலகட்டத்தில்கூட, அது ஒரு போராக மாறும் என இருவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதையடுத்து, ஆர்மினியாவுக்குச் சென்ற அவர்கள் அங்கிருந்து ஜார்ஜியாவுக்குச் சென்று, துருக்கி வழியாக பிரிட்டனைச் சென்றடைந்தனர். ரஷ்ய எல்லையைக் கடக்கும்போது, ரஷ்ய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

“உக்ரைன் போர் காலகட்டத்தில் ரஷ்யாவிலிருந்து பிரிட்டனுக்கு வந்தவர்கள் நாங்கள் மட்டும்தான் என நினைக்கிறோம்” எனக் கூறியிருக்கும் இருவரும், லண்டனில் உள்ள ஸ்டான்ஸெட் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அடைக்கலம் கோரி விண்ணப்பித்திருக்கின்றனர்.

“மரணத்தையும் அழிவையும் தவிர போர் வேறு எதையும் கொண்டுவருவதில்லை. இந்தப் போர், உக்ரைனியர்கள் மீதான அட்டூழியங்களையும் தாண்டி, ரஷ்யர்களையும் பல தசாப்தங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும்” என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான ரஷ்யர்கள் இன்னமும் போரின் தீவிரத்தை உணரவில்லை என்றும், உணவுக்குத் தட்டுப்பாடு வரும் சூழல் உருவாகும்போதுதான் போரின் விளைவுகளைப் பற்றி அறிந்துகொள்வார்கள் என்றும் இருவரும் தெரிவிக்கின்றனர். “நாங்கள் அரசியல் செயற்பாட்டாளர்கள் அல்ல. எனினும், போரின் முதல் நாளிலேயே போராட முடிவெடுத்தோம். போராடாமல் அமைதியாக இருந்திருந்தால் எங்களை நாங்களே மன்னித்திருக்க மாட்டோம்” என்கிறார்கள் அந்தத் தம்பதியினர்.

மனசாட்சி உள்ளவர்களின் வார்த்தைகள் அப்படித்தானே இருக்கும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE