போரிஸ் ஜான்சனுடன் பேசிய மோடி: இரு தரப்பு அறிக்கைகளில் 'முக்கிய' வேறுபாடு!

By காமதேனு

உக்ரைனில் 28-வது நாளாகத் தாக்குதல் நடத்திவருகிறது ரஷ்யா. இந்தச் சூழலில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக, நேற்று இரவு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி பேசினார். இதுதொடர்பாக இரு நாடுகளும் வெளியிட்டிருக்கும் அறிக்கைகளில் முக்கியமான வேறுபாடு இருப்பது தெரியவந்திருக்கிறது.

இரு தலைவர்களும் உக்ரைன் விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதித்ததாகவும், போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு ராஜதந்திர உறவுநிலைக்கு நிலவரம் திரும்ப வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்திவருவதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டியதாகவும் பிரதமர் மோடியின் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், அந்த அறிக்கையில் ரஷ்யாவின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

ஆனால், ஐநா பட்டயத்துக்குக் கீழ்ப்படிந்து ரஷ்யா நடக்க வேண்டும் என்றும், உக்ரைனின் ஒருமைப்பாடு மற்றும் பிராந்திய இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்றும் பிரிட்டன் - இந்தியப் பிரதமர்கள் பேசியதாக பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. (இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1945-ல் கையெழுத்தான ஐநா பட்டயத்தின் அடிப்படையில்தான் ஐநா உருவானது. அந்த ஒப்பந்தத்தின் சட்டக்கூறு 2(4), எந்த நாட்டின் மீதும் அச்சுறுத்தல் விடுப்பதையும் படைகளைப் பயன்படுத்துவதையும் தடை செய்கிறது)

எனினும், இரு நாட்டு அறிக்கைகளிலும் இருக்கும் இந்த முக்கிய வேறுபாடு குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கைகள் தொடர்பாக இதுவரை ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் இந்தியா வாக்களிக்காமல் தவிர்த்துவிட்டது. அதேபோல், உக்ரைனை ரஷ்யா ஊடுருவியது குறித்த நேரடியான வார்த்தைகளும் இந்தியத் தரப்பில் வெளியான அறிக்கைகளில் இடம்பெறவில்லை.

வாஷிங்டனில் நேற்று நடந்த ‘பிசினஸ் ரவுண்ட்-டேபிள்’ எனும் அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஊடுருவல் குறித்துப் பேசுகையில், “குவாட் அமைப்பில் உள்ள ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இதை உறுதியாகக் கண்டித்திருக்கும் நிலையில், இந்தியா மட்டும் ஏனோ சற்றே நடுங்குகிறது” என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

இதற்கிடையே, இந்தியாவுக்கு வருகைதரவிருந்த போரிஸ் ஜான்சனின் பயணம், கரோனா பரவல் காரணமாக இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் மாதம் அவர் இந்தியா வருகிறார். அதற்கு முன்னதாக, மார்ச் இறுதியில் பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் இந்தியாவுக்கு வருகிறார்.

ரஷ்யா தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டுவர மேற்கத்திய நாடுகள் முயற்சிப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE