நாஜி வதைமுகாமில் உயிர் தப்பியவர் ரஷ்யத் தாக்குதலில் மரணம்!

By சந்தனார்

உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடர்ந்து நடத்திவருகிறது ரஷ்யா. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் என உக்ரைனின் பல நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது. கார்கிவ் நகரில் மட்டும் 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய குண்டுவீச்சு அல்லது ஏவுகணைத் தாக்குதலில் போரிஸ் ரோமன்சென்கோ எனும் 96 வயது முதியவர் கொல்லப்பட்டார். கார்கிவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்த அவர், மார்ச் 18-ல் நடந்த தாக்குதலில் உயிரிழந்தார்.

இந்தத் தகவலை புஷென்வால்டு வதை முகாமில் இருந்தவர்கள் நடத்திவரும் அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். இரண்டாவது உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜி படைகள் நடத்திய யூத இன அழிப்பு நடவடிக்கைகளின் முக்கிய அம்சமாக இருந்தவை வதை முகாம்கள்தான். அந்த முகாம்களில் கம்யூனிஸ்ட்கள், நாடோடிகள், போர்க்கைதிகள் போன்றோரும் அடைக்கப்பட்டிருந்தனர்.

உக்ரைனின் வடகிழக்கு நகரான சுமிக்கு அருகில் உள்ள போண்டாரி எனும் கிராமத்தில் 1926-ல் பிறந்த போரிஸ், 1941-ல் சோவியத் ஒன்றியத்தின் மீது நடத்திய பார்பரோஸா ஆபரேஷன் தாக்குதலில் போர்க்கைதியாகப் பிடிபட்டார். பின்னர், ஜெர்மனியின் டோர்ட்மண்ட் நகரில் உள்ள வதைமுகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு கொத்தடிமையாக ஒரு சுரங்கத்தில் வேலை பார்த்தார். அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற அவரை, 1943-ல் புஷென்வால்டு முகாமுக்கு ரயிலில் அனுப்பிவைத்தனர் நாஜி படையினர்.

பின்னர் பால்டிக் கடல் தீவான யூஸ்டமில் உள்ள பெய்னமுண்டே வதை முகாமில் அடைக்கப்பட்ட அவர், வி-2 ரக ராக்கெட் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். பின்னர் மீட்டெல்பாவ் - டோரா வதைமுகாம், பெர்கென் - பெல்ஸன் வதைமுகாம் எனத் தொடர்ந்து நாஜிகளின் வதை முகாமில் அடைபட்டுக் கிடந்தார்.

இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தில் 1945 ஏப்ரல் 14-ல் பிரிட்டன் படைகளும் அமெரிக்கப் படைகளும் இணைந்து ஜெர்மன் ராணுவத்தினரை வீழ்த்தி, பெர்கென் - பெல்ஸன் முகாமிலிருந்து போரிஸ் உள்ளிட்ட ஏராளமானோரை மீட்டனர். அந்த வதைமுகாமில் அடைக்கப்பட்டிருந்தவர்களுக்கு விஷம் கலந்த உணவை வழங்க நாஜிகள் திட்டமிட்டிருந்தபோதுதான் போரிஸும் மற்றவர்களும் ஒருவழியாக விடுவிக்கப்பட்டனர்.

அதன் பின்னர், சோவியத் ஒன்றிய ராணுவத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தார் போரிஸ். பின்னர் புஷென்வால் - டோரா நினைவு அறக்கட்டளையின் சர்வதேச கமிட்டியின் உக்ரைன் பிரிவுத் துணைத் தலைவராகவும் இருந்தார். நாஜிகளின் வதைமுகாம்களில் நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகளுக்கு சாட்சியமாக இருந்த முன்னாள் ரஷ்யர், உக்ரைன் போரில் ரஷ்யாவாலேயே கொல்லப்பட்டிருப்பதுதான் வேதனையான விஷயம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE