இந்திய மாணவர்களுக்கு உக்ரைன் அரசு முக்கிய அறிவிப்பு

By காமதேனு

மருத்துவ தகுதித் தேர்வு தொடர்பாக இந்திய மாணவர்களுக்கு உக்ரைன் அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

உக்ரைன் மீது கடந்த மாதம் 24-ம் தேதி ரஷ்யா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால், உக்ரைனில் மருத்துவப் படிப்பு படித்து வந்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர். அவர்களின் மருத்துவ படிப்பு இந்த போரால் பெரும் தடையாக அமைந்தது. இதனால், மாணவர்கள் வேதனையடைந்தனர். உள்நாட்டிலேயே தங்கள் படிப்பை தொடர நடவடிக்கை வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், இந்திய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை உக்ரைன் மருத்துவப் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கான KROK-1 தகுதித் தேர்வு ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்படுவதாகவும், 5-ம் ஆண்டு மாணவர்களுக்கான KROK-2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இறுதியாண்டு KROK-2 தேர்வு எழுதாமலேயே மருத்துவ படிப்பிற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்றும் உக்ரைன் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்த சலுகை பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உக்ரைன் மருத்துவ மாணவர்கள் தகுதித் KROK தேர்வு எழுதினால் மட்டுமே அடுத்தாண்டு வகுப்புக்கு செல்ல முடியும் என்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE