ரஷ்யா ஒரு போர் இயந்திரம்... உக்ரைனுக்குப் பிறகு உங்களையும் தாக்கலாம்!

By காமதேனு

உக்ரைன் போரின் 20-வது நாளான இன்று காலை, மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில் ஓர் எச்சரிக்கையை முன்வைத்திருக்கிறார் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி.

உக்ரைன் மீது ஊடுருவல் நடத்தி தாக்குதலில் ஈடுபட்டிருக்கும் ரஷ்யாவுக்கு எதிராக தார்மிக நிலைப்பாட்டை எடுத்த நாடுகளுக்குத் தனது உரையில் ஸெலன்ஸ்கி நன்றி சொன்னார்.

குறிப்பாக, பிரிட்டன் அதிபர் போரிஸ் ஜான்சனுக்கு நன்றி சொன்ன அவர், “நம்மால் ரஷ்யாவைத் தடுத்து நிறுத்த முடியும். மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க முடியும். ஜனநாயகம் அழிக்கப்படுவதைத் தடுக்க முடியும். எங்கள் மண்ணிலேயே அதைச் செய்ய முடியும். இல்லையென்றால், அவர்கள் உங்களை நோக்கி வருவார்கள். ரஷ்யா ஒரு போர் இயந்திரம். அது தடுத்து நிறுத்தப்படாவிட்டால் உங்கள் நாடுகளையும் தாக்கும்” என்றார்.

இதற்கிடையே, நேற்று மாலை அரசுத் தொலைக்காட்சியான ‘சேனல் ஒன்’ சேனலில், செய்தி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தபோது மரினா ஒவ்சையான்னிகோவா எனும் பெண், “போரை நிறுத்துங்கள். போர் வேண்டாம்” என்று குறுக்கிட்டு கூச்சலிட்டதாகச் செய்திகள் வெளியாகின. அவர் வைத்திருந்த பதாகையில், ‘இந்தப் பிரச்சாரத்தை நம்பாதீர்கள். அவர்கள் உங்களிடம் பொய் சொல்கிறார்கள். ரஷ்யர்கள் இந்தப் போரை எதிர்க்கிறார்கள்’ என்று ரஷ்ய மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. அவர் அந்த சேனலின் ஆசியர்களில் ஒருவர் ஆவார்.

முன்னதாக, ‘சேனல் ஒன்’ தொலைக்காட்சியில் வேலை செய்வது அவமானகரமானது என அவர் பேசிய காணொலியும் ஓவிடி-இன்ஃபோ எனும் மனித உரிமைக் குழு மூலம் வெளியாகியிருக்கிறது. அதில் ரஷ்யா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் பதிவுசெய்திருக்கிறார்.

இந்நிலையில், கருத்து சுதந்திரத்தைப் பயன்படுத்தி போருக்கு எதிராகப் பேசிய அவரை தண்டித்துவிட வேண்டாம் என ரஷ்யாவிடம் ஐநா கேட்டுக்கொண்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE