உலக அதிசயமான டாக்கா மஸ்லின்: மீண்டும் நெய்யப்படுகிறதா?

By ஆர்.என்.சர்மா

கிராம்பு, ஏலக்காய் போன்ற வாசனைத் திரவியங்களுக்காக உலகம் முழுவதும் புகழ்பெற்ற இந்தியா பருத்தி, பட்டு, மஸ்லின் துணி வகைகளுக்காகவும் வியந்து பேசப்பட்டது. முகலாயச் சக்கரவர்த்திகள், அவர்களுடைய மகாராணிகள், அந்தப்புரத்து அழகிகள், சேனைத் தலைவர்களின் குடும்பத்தவர், 18-ம் நூற்றாண்டு மேலை நாட்டு அரச குடும்பத்தினர், பிரபுக்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என்று அனைவரும் பெருமையுடன் வாங்கி அணிந்து மகிழ்ந்தவை டாக்கா மஸ்லின் துணிகள். இந்தத் துணியை அணிந்தவருக்கு உடலில் ஆடை இருப்பது போலவே தோன்றாது. அந்த அளவுக்கு மென்மையாகவும் மிருதுவாகவும், இயற்கையான உடலுக்கு மேலே இன்னொரு சருமத்தைப் போர்த்தியதைப் போலவும் பாந்தமாக இருக்கும்.

மஸ்லின் துணி பற்றி கேள்விப்பட்டவர்களுக்குக்கூட அது எங்கே, எப்படி கிடைக்கிறது, எப்படி நெய்கிறார்கள் என்பது தெரிந்திருக்காது. பிரிட்டிஷார் ஆட்சிக் காலம் வரையில் மிகவும் பரவலாகப் பயன்பட்ட இந்த ரகம் பிற்காலத்தில் அருகிவிட்டது. அது மட்டுமல்ல அடுத்து வந்த தலைமுறைக்கு இந்த மஸ்லினை எதிலிருந்து தயாரித்தார்கள், அது செடியா - கொடியா, நூலை எப்படி நெய்தார்கள், வேறென்ன பக்குவம் செய்தார்கள் என்று எதுவுமே தெரியவில்லை. தலைமுறை இடைவெளி காரணமாகவும் அரசியல் மாற்றங்களாலும் கடந்த இருநூறு ஆண்டுகளில் இது அடியோடு மறக்கப்பட்டுவிட்டது.

தமிழகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களையும் இதர பயிர் வகைகளையும் மீட்டெடுக்கும் நல்லவர்கள் எண்ணிக்கை கூடுவதைப்போல டாக்கா மஸ்லினுக்கும் மறுவாழ்வு கிடைத்துவிட்டது. மஸ்லின் துணி குறித்து ஐரோப்பாவில் கிளுகிளுப்பான கதைகள் பல உண்டு. வானில் சூரிய ஒளி திடீரென குறைந்தாலோ, அல்லது திடீரென மழை பெய்தாலோ மஸ்லின் நனைந்து, அதை அணிந்திருப்பவருடைய உடல் முழுக்க அப்படியே தெரியும் என்பார்கள். மஸ்லின் அணிபவர்கள் எச்சரிக்கையாக உள்ளாடையுடன்தான் அணிவார்கள், இருந்தாலும் சில வம்பர்கள் இப்படியெல்லாம் கதை கட்டி விட்டார்கள். ஆனால் மஸ்லினை விற்கும்போது அது எவ்வளவு மிருதுவானது, எந்த அளவுக்கு மடித்து வைக்க எளிதானது என்பதைக் காட்ட 16 கெஜம், 18 கெஜம் மஸ்லின் துணியைக்கூட ஒரு கைவிரல் மோதிரத்துக்குள் எளிதாக நுழைத்து வெளியே எடுத்துக் காட்டுவார்கள். மஸ்லின் புடவையை எடுத்துச் செல்ல பை தேவையில்ல, தீப்பெட்டியே போதும் என்பார்கள். இப்படிப்பட்ட மஸ்லின் - பட்டு, வெல்வெட்டு, சாட்டீன் ஆகியவற்றைவிட விலை அதிகமானது.

காரணம் மஸ்லின் தயாரிப்பதற்கான நூலிழையை சாதாரண பருத்தியிலிருந்து எடுக்க முடியாது. இதற்கென்று தனிரக பருத்திச் செடி இருக்கிறது. அந்தச் செடி எல்லா இடத்திலும் வளராது. இப்போதைய வங்கதேசத்தின் டாக்கா நகர ஆற்றங்கரையோரத்தில் மட்டுமே இவை வளரும். இதில் கிடைக்கும் பஞ்சை எடுத்து பக்குவம் செய்து நூலைத் தயாரிப்பதற்கு அதிகப் பொறுமையும் நேரமும் தேவைப்படும். அடுத்து அதை நூலாகத் திரிக்க சாதாரண நூல் ராட்டைகள் பயன்படாது. மரக்கட்டைகளால் செய்யப்பட்ட ராட்டையில் மிகவும் மெலிதான நுட்பமான பாகங்களைப் பொருத்துவதன் மூலம்தான் நெய்ய முடியும். 2 அங்குல மஸ்லினை நெய்ய இரண்டு மணி நேரம் கூட ஆகும். சற்று அவசரப்பட்டு இழையை இழுத்தால் அறுந்துவிடும்.

பிரைட் அண்ட் பிரிஜுடிஸ் நூலை எழுதிய ஜேன் ஆஸ்டின், மஸ்லின் சால்வையை வாங்கி ஆசையோடு அதில் தன் கையால் எம்ப்ராய்டரி செய்து நீண்ட நாள் பயன்படுத்தி வந்தார். அது இப்போது ஹாம்ப்ஷைர் நகரில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருக்கிறது. வங்காளத்தைக் கிழக்கு இந்திய கம்பெனி கைப்பற்றி, பிரிட்டிஷ் காலனியாதிக்கம் வலுப்பெற்றவுடன் டாக்காவில் மஸ்லின் துணி நெய்வதும் இழை தயாரிப்பதும் நின்றுவிட்டது. இங்கிலாந்தில் தோன்றிய பருத்தித் துணி ஆலைகள் மிகவும் மலிதாகவும் உறுதியாகவும் துணிகளைத் தயாரித்து விலை குறைத்து விற்கத் தொடங்கியதால் நாட்டு ரகங்களுக்கு கிராக்கி குறைந்தது. அத்துடன் ஐரோப்பியர்கள் மஸ்லினுக்குள்ள தேவையைக் கருத்தில் கொண்டு அதற்கு அபரிமிதமாக இறக்குமதி வரி விதித்தனர். எனவே ஐரோப்பியர்களும் மஸ்லின் மோகத்தைக் குறைத்துக் கொண்டனர். இந்தக் காரணங்களால்தான் மஸ்லின் துணியின் தொடர்பு அறுபட்டுப்போனது. பழங்கதைகளிலும் மக்களுடைய நினைவலைகளிலும் மட்டுமே மஸ்லின் வாழ்ந்தது.

அபூர்வ பருத்திச் செடி

மஸ்லினை மீண்டும் கொண்டுவந்தே ஆக வேண்டும் என்று வங்கதேச அரசு முனைப்பு காட்டியது. அந்த பருத்திச் செடி எதுவாக இருக்கும் என்று தாவரவியல் ஆய்வர்கள் ஐந்தாண்டுகளாகத் தேடினார்கள். மஸ்லின் துணியைத் தயாரிக்க எதைப் பயன்படுத்தினார்கள் என்று பழைய புத்தகங்கள், நாவல்கள், அரசு அறிக்கைகள், கிழக்கிந்திய க\ம்பெனியின் ரகசியக் குறிப்புகள், முகலாயப் பேரரசர்களின் அரசவைப் புலவர்கள், வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய குறிப்புகளையெல்லாம் படித்தார்கள். மன்சூர் உசைன் என்ற தாவரவியலாளர் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கினார். 18-வது நூற்றாண்டில் சுவீடனைச் சேர்ந்த இயற்கையார்வலர் கார்ல் லின்னேயஸ் எழுதிய தாவரங்கள் பற்றிய நூலில், டாக்கா மஸ்லின் கிடைத்த தாவரம் பற்றிய குறிப்பு இருந்தது. டாக்காவில்தான் அது விளைந்தது என்பது தெரிந்ததும் மன்சூர் உசைன் குழுவினர் 39 வகை பருத்திச் செடிகளை வலைவீசிக் கண்டுபிடித்து அவற்றிலிருந்து நூலிழையைத் தயாரித்துப் பார்த்தனர். லண்டனில் உள்ள விக்டோரியா, ஆல்பர்ட் அருங்காட்சியகக் காப்பாளர்கள் தாங்கள் பாதுகாத்து வந்த முகலாயர்களின் மஸ்லின் ஆடைகளை ஆய்வர்களிடம் காட்டினார்கள்.

மரபணு சோதனைகள் மூலம் ஆய்வு செய்த அவர்களுக்கு ஆனந்தப் பேரதிர்ச்சி, ஆம், அந்த நூலிழையைத் தந்த செடி அவர்களிடம் இருந்தது. டாக்காவுக்கு வடக்கே கபாசியா என்ற சிறு நகரத்தின் ஆற்றங்கரையோரம் அந்தச் செடிகள் இருந்ன. புட்டி என்று அழைக்கப்பட்ட அந்த நூலைப் பிரித்தெடுக்க கபாசியாவில் உள்ள செடி பயன்பட்டது என்று வரலாற்று நூலில் ஒரு குறிப்பு கிடைத்தது. ‘கண்டோம் - மஸ்லினின் அன்னையை’ என்று ஆய்வர்கள் மகிழ்ந்தார்கள். இப்போது இந்தச் செடியை வங்கதேசத்தின் ஆய்வுப் பண்ணைகளில் வளர்க்கின்றனர். நாளடைவில் இதைப் பெருமளவில் சாகுபடி செய்யும் திட்டமும் இருக்கிறது.

அடுத்த கட்ட சோதனை

சரி, செடியைக் கண்டுபிடித்தாகிவிட்டது, நூலையும் இந்தப் பஞ்சிலிருந்து எடுக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம், யார் இதை நெய்வார்கள் என்ற கேள்வி ஆய்வர்களுக்கு வந்தது. பழைய நெசவாளர் குடும்பங்களில் குடும்பத் தொழிலாக இதைச் செய்வோரை அணுகினார்கள். டாக்காவைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஜம்தாரி பருத்தி சேலைகளை நெய்வோர் இருக்கின்றனர். அவர்களில் கைதேர்ந்த சில நெசவாளர்களைத் தேர்வு செய்து இந்த பருத்தியை அவர்களிடம் கொடுத்து நூற்கச் சொன்னார்கள். இந்த வேலையைச் செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளவர்களில் மோஷினா அக்தரும் ஒருவர். அவரால்தான் இதை முதலில் நூற்க முடிந்தது.

அது பற்றி அவரிடம் கேட்டபோது, “எப்படிச் செய்தேன் என்று தெரியாது, ஆனால் வழிபாட்டின்போது மனதை அடக்கி சிந்தனையை ஒருமுகப்படுத்தி அந்த ஒரு செயலில் மட்டும் மனம் லயித்துச் செய்வதைப் போலச் செய்தால்தான் இது சாத்தியமாகிறது. இல்லாவிட்டால் நூலை ஒரு இம்மி கூட நூற்க முடியவில்லை” என்றார். அடேயப்பா, நம்முடைய மூதாதையர்கள் இந்த விஷயங்களில் எவ்வளவு தேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். நவீன இயந்திரங்கள் நுட்பங்கள் எதுவுமில்லாமல் உடலையும் மனதையுமே கருவியாகக் கொண்டு ஒவ்வொரு தொழிலையுமே ஒரு தவமாகச் செய்திருக்கிறார்கள். “கோபப்பட்டாலோ, கவலையாக இருந்தாலோ இந்த நூலை நூற்கவே முடியாது” என்கிறார் மோஷினா அக்தர். அபு தாஹிர் என்ற சக நெசவாளியும் இதை அப்படியே வழிமொழிகிறார்.

இதற்கான மையப் பொறுப்பாளராக அயூப் அலி தொடர்ந்து இதில் ஆர்வமுடன் செயல்படுகிறார். டாக்கா மஸ்லினை மீண்டும் உலக அளவில் சந்தைப்படுத்த வங்கதேச அரசு அனைத்து உதவிகளையும் செய்கிறது. அரிதான பொருள் மீண்டும் கிடைத்திருப்பது அந்த மூத்தோர்களின் ஆசியால்தான். அதைத் தொடர்வதே நாம் அவர்களுக்குச் செய்யும் அஞ்சலி!

* பயன்படுத்தப்பட்டிருப்பவை மாதிரிப் படங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE