கடன் பத்திரங்களில் தவணை மீறும் ரஷ்யா: கடுமையாக விமர்சித்த ஃபிட்ச்!

By ஆர்.என்.சர்மா

உலக நிதி நிறுவனங்களின் நம்பகத்தன்மை, நிதிநிலை வளம் ஆகியவற்றை அவ்வப்போது ஆராய்ந்து அறிவிக்கும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம், இனி ரஷ்ய அரசு வெளியிடும் கடன் பத்திரங்களுக்கு மதிப்பில்லை என்று அறிவித்துள்ளது. அத்துடன் நாடுகளின் தர மதிப்பீட்டு அட்டவணையின் கடைசி வரிசைக்கு ரஷ்யாவை இறக்கிவிட்டது. இனி ரஷ்ய கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்பதே இதன் பொருள். மூடீஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ், எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் ஆகிய தர நிர்ணய நிறுவனங்கள் ஏற்கெனவே இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டன.

அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளும் நிறுவனங்களும் எடுத்துவரும் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளால் ரஷ்யா, தான் விற்ற கடன் பத்திரங்களுக்கான வட்டியையோ, முதிர்வுக் காலம் வந்துவிட்ட பத்திரங்களுக்கான முகமதிப்பு அசலையோ வழங்க முடியவில்லை. கையில் பணம் இல்லாததால் இந்நிலை ஏற்பட்டுவிடவில்லை, அதனுடனான நிதிப் பரிமாற்றங்கள் முடக்கப்பட்டிருப்பதாலேயே இப்படி நேர்ந்திருக்கிறது. எப்படியிருந்தாலும் இது ரஷ்யாவுக்கு நிச்சயம் பின்னடைவே. மேற்கத்திய தனி முதலீட்டாளர்களும் நிறுவனங்களும்தான் உலகப் பங்குச் சந்தைகளிலும் கடன் சந்தைகளிலும் அவ்வப்போது மாற்றி மாற்றி முதலீடு செய்கின்றனர். மேற்கத்திய நாடுகளின் தடை அறிவிப்பே அந்த முதலீட்டாளர்களுக்கு விடுக்கப்பட்ட முதல் எச்சரிக்கையைப் போலத்தான். இப்போது ரஷ்ய அரசின் கடன் பத்திரங்களை வாங்கியோருக்கு வட்டி தவணையோ, முதிர்ந்த கடன் பத்திரங்களுக்கு முகமதிப்புக்கு ஈடான அசலோ திரும்பச் செலுத்தப்படவில்லை என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அரசின் கடன் பத்திரங்கள் முதலீட்டுக்கு உகந்தவை அல்ல என்று முதலீட்டாளர்கள் இனி முடிவெடுத்துவிடுவார்கள். இது ரஷ்யாவுக்கு மேலும் பின்னடைவாகவே அமையும்.

“ரஷ்யாவால் கடன் பத்திரங்களுக்கு வட்டி தர முடியாமல் போகும், முதிர்ந்த பத்திரங்களுக்கு அசல் தர முடியாமல் போகும் என்றெல்லாம் விரிவாகச் சொல்லவே தேவையில்லை, இப்போதே அதுதான் நிலை” என்று ஏஎம்பி கேப்பிடல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி சுட்டிகாட்டுகிறார். முதிர்வடையும் பத்திரங்களுக்கு ரஷ்யாவால் ரூபிளில்தான் பணம் தர முடியும். ரூபிளின் மதிப்பும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. எனவே ரஷ்யக் கடன் பத்திரங்களை விலைக்கு வாங்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கிடைத்த விலைக்கு விற்றுவிடத் தயாராக இருக்கிறார்கள். நல்ல வேளையாக இந்தக் கடன் பத்திரங்களை வெளிநாட்டவர்கள் அதிகம் வாங்குவதில்லை என்கிறது ஏஎம்பி கேப்பிடல் நிறுவனம். 1917-ல் ரஷ்யாவில் நடந்த போல்ஷ்விக் புரட்சிக்குப் பிறகு ரஷ்யக் கடன் பத்திரங்களின் மதிப்பு இப்போதுதான் முதல் முறையாக இப்படி சரிந்துள்ளது.

ரூபிளின் மாற்று மதிப்பு வேகமாகச் சரிகிறது என்பதற்காகத்தான் பிப்ரவரி இறுதியில், ரஷ்ய வங்கிகள் சேமிப்புக்குத் தரும் வட்டி வீதத்தை இரட்டிப்பாக்கி 20% என்று ரஷ்யாவின் மத்திய வங்கி அறிவித்தது.

உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யாவை நேரடியாகப் போரிட்டு தடுக்க முடியாத நேட்டோ ஒப்பந்த நாடுகள், பொருளாதாரத் தடைகளையும் இதரத் தடைகளையும் ஒவ்வொன்றாக விதித்து அச்சுறுத்துகின்றன. அமெரிக்காவைப்போல ரஷ்யாவும் அணு ஆயுதம் வைத்துள்ள நாடு என்பதால் அதனுடன் நேரடியாகப் போருக்குப் போக மேற்கத்திய நாடுகள் தயங்குகின்றன. எனவேதான் இப்படி மாற்று வழிகளைச் சிந்திக்கின்றன. ரஷ்யாவில் உற்பத்தியாகும் கச்சா பெட்ரோலிய எண்ணெயையும் இயற்கை எரிவாயுவையும் வாங்குவதில்லை என்ற முடிவை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன.

“ரஷ்யப் பொருளாதாரத்தின் மூல விசையை இப்போது தடை செய்துள்ளோம்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். ரஷ்யாவின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக இருப்பது கச்சா பெட்ரோலிய எண்ணெயும் இயற்கை எரிவாயுவும்தான். ரஷ்யாவிடமிருந்து இயற்கை எரிவாயுவை வாங்குவதை முற்றாக நிறுத்தப்போவதாக ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்துள்ளது. அதிகம் உற்பத்தியாகும் பொருள்களை வாங்க மாட்டோம் என்று புறக்கணித்தால் சந்தை கோட்பாட்டின்படி அதன் விலை குறைய வேண்டும். ஆனால் இந்த அறிவிப்பால் சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை மேலும் மேலும் உயரும். ரஷ்யாவிடம் எண்ணெயும் எரிவாயுவும் வாங்கிய நாடுகள் அனைத்தும் தங்களுடைய தேவைக்காக இதர உற்பத்தி நாடுகளிடம் போய் நிற்கும்போது, அங்கே தேவை அதிகமாகி அளிப்பு குறைவதால் விலை மேலும் மேலும் உயர்ந்துகொண்டே வரும்.

இந்தத் தடைகளின் ஒரு பகுதியாகவே, ரஷ்யாவுடனான வர்த்தக உறவைத் துண்டித்துக் கொள்வதாக ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் வரிசையாக அறிவித்து வருகின்றன. மெக்டொனல்ட்ஸ், கோகா-கோலா, ஸ்டார்பக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இதில் இப்போது சேர்ந்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE