‘உறவுகளே, வாருங்கள்!’ - உக்ரைன் யூத அகதிகளை இஸ்ரேல் அழைக்கும் மர்மம் என்ன?

By ஆர்.என்.சர்மா

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது இஸ்ரேல். உக்ரைன் நாட்டைச் சேர்ந்த யூதர்கள் (கவனிக்க – யூதர்கள் மட்டும்) தாக்குதலிலிருந்து தப்பிக்க நினைத்து அகதிகளாக வெளியேறினால், நேரடியாக இஸ்ரேலுக்கு வந்து குடியுரிமை பெறலாம் என்று இஸ்ரேலிய அரசு வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. இதில் என்ன தவறு, மனிதாபிமான உதவிதானே என்று முதலில் தோன்றும். உண்மையில் இதன் பின்னால் இஸ்ரேல் அரசுக்கு இரட்டை நோக்கம் இருக்கிறது.

பிரத்யேகமான உபசரிப்பு

முதலாவதாக, இஸ்ரேலில் உள்ள யூதர்களின் எண்ணிக்கையைக் குறுகிய காலத்தில் அதிகப்படுத்திவிடலாம். இரண்டாவதாக, பாலஸ்தீனர்களிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளில் புதிய குடியிருப்புகளைக் கட்டி அதில் உக்ரைன் யூதர்களைக் குடியமர்த்தி விடலாம். இதனால் நாளடைவில் பாலஸ்தீனர்களைவிட இஸ்ரேலியக் குடியுரிமை பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிடும். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுத்த ஒரு வாரத்துக்கெல்லாம் பக்கத்து நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றவர்களில் யூதர்களுக்கு மட்டும் தனி இடங்களை தயார் செய்து அங்கே அவர்களைத் தங்க வைத்து உணவு, உடை, மருந்து – மாத்திரைகள் கொடுத்து அவர்களை உபசரிக்கும் இஸ்ரேலிய அரசு, அவர்கள் விரும்பினால் உடனடியாக விமானத்தில் ஏற்றி இஸ்ரேலுக்குக் கொண்டு வருகிறது.

ரஷ்யா தாக்குதல் தொடங்கிய பிப்ரவரி 24 முதல் இதுவரை நூறு பேருக்கும் மேல் வந்துள்ளனர். அடுத்த ஒரு வாரத்துக்குள் பத்தாயிரம் யூதர்கள் இஸ்ரேலுக்கு வந்துவிடுவார்கள் என்று அந்த நாடு எதிர்பார்க்கிறது. இஸ்ரேலியக் குடியுரிமை பெறும் சட்டபூர்வ நடைமுறைகளையும் நிர்வாக ஏற்பாடுகளையும் வேகமாக மேற்கொள்ளுமாறு தொடர்புள்ள துறைகளுக்கு இஸ்ரேலிய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

‘இஸ்ரேல் உங்களுடைய வீடு, திரும்பி வாருங்கள்’ என்று இஸ்ரேலின் குடியேற்ற அமைச்சகம் பிப்ரவரி 26-ம் நாளே அழைப்பு விடுத்துவிட்டது. உக்ரைனின் கீவ், ஒடேசா நகரங்களிலிருந்து இரண்டு விமானங்களில் 100-க்கும் மேற்பட்ட உக்ரைன் யூதர்கள் வந்துள்ளனர். பாலஸ்தீனத்தில் சட்டவிரோதமாக தாங்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்களில் ஆயிரம் வீடுகளைக் கட்டி அதில் 10,000 உக்ரைனிய யூதர்களைக் குடியமர்த்தும் திட்டத்தை அரசு வெளியிட்டிருக்கிறது.

1950 மற்றும் 1952-ம் ஆண்டுகளில் இஸ்ரேலில் இயற்றப்பட்ட, யூதர்கள் தாய் மண்ணுக்குத் திரும்பலாம் என்ற சட்டங்களின்படி, இப்போது உக்ரைனைச் சேர்ந்த 2 லட்சம் யூத அகதிகளுக்கு இஸ்ரேலின் குடிமக்களாகத் தகுதி உண்டு. போலந்து, மால்டோவா, ருமேனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் உக்ரைனை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் இஸ்ரேல் அரசு யூதர்களை அடையாளம் கண்டு அரவணைக்க, தனி முகாம்களைத் திறந்துள்ளது. அந்தத் தற்காலிக முகாமிலேயே யூதர்கள் வந்தவுடன் அவர்களுக்கு உணவு, குடிநீர், உடைகள், கட்டிலுடன் படுக்கைகள், மருத்துவ சிகிச்சை, தகவல்-தொடர்பு வசதிகள் செய்து தரப்படுகின்றன. கைச்செலவுக்குப் பணம் தேவைப்படுவோருக்கு அதுவும் தரப்படுகிறது. பிறகு அனைவரும் இலவசமாக விமானங்களில் உடனுக்குடன் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு அவர்கள் இப்போதைக்குத் தற்காலிக தங்குமிடங்களில் இருக்க வேண்டும். அவர்களுக்கென்று வீடுகள் தயாரான பிறகு அங்கே எல்லா வசதிகளுடன் குடியமர்த்தப்படுவார்கள். இளைஞர் விடுதி, சமுதாயக் கூடம் போன்றவற்றுடன் ஹோட்டல்களில் கூட அவர்கள் தங்க வைக்கப்படுகின்றனர்.

1918-ல் பாலஸ்தீனத்தை பிரிட்டிஷார் கைப்பற்றுவதற்கு முன்னால் மொத்த மக்கள்தொகையில் யூதர்கள் எண்ணிக்கை வெறும் 3 சதவீதம் தான். பிறகு அது 9 சதவீதமானது. 1922 முதல் 1935 வரையில் அது அதிகரித்து 27 சதவீதமானது. 1947-ல் யூதர்கள் குடியேற வசதிகள் செய்து தரப்பட்டதாலும் இரண்டாவது உலகப் போரின்போது நாஜிகளால் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ஏராளமானோர் தங்களுக்கென்று ஒரு நாட்டைத் தேடி பாலஸ்தீனம் வந்ததாலும் மக்கள் தொகையில் அதிகமாகி 33 சதவீதமாக உயர்ந்தனர். 1948-ல் பாலஸ்தீனர்களில் 7,50,000 பேரை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அவர்களுடைய இடங்களைப் பறித்துக்கொண்டது இஸ்ரேல். உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவரானாலும் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் யூதர் என்றால் அவர்கள் இஸ்ரேலில் குடியுரிமை பெறத் தகுதி உண்டு என்று சட்டமியற்றப்பட்டது. அப்படிக் குடியேற வருகிறவரோ அவருடைய மூதாதையரோ இஸ்ரேலில் வசித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்ற அளவுக்கு அந்தச் சட்டம் தாராளமாக இருக்கிறது.

அதே சமயம் தங்களுடைய நாட்டில் குடியேற உரிமை கோரி பதிவு செய்துவிட்டு அறுபது லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் ஜோர்டான், சிரியா, எகிப்து, லெபனான் ஆகிய நாடுகளில் 58 முகாம்களில் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கின்றனர்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE