வேண்டாம் போர்: வேலையைவிட்டு ஒட்டுமொத்தமாக விலகிய ஊடகர்கள்!

By காமதேனு

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போரை ரஷ்யர்களில் பலர் தொடர்ந்து கண்டித்திருக்கிறார்கள். போர் தொடங்கிய நாள் முதல் பொதுமக்கள் மட்டுமல்லாது அரசு நிர்வாகத்திலும், அரசுசார் நிறுவனங்களிலும் பணிபுரியும் பலரும் போருக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகிறார்கள். அதேபோல் அரசுத் தொலைக்காட்சியில் பணிபுரியும் பலர் தங்கள் கண்டனக் குரலைப் பதிவுசெய்திருந்தனர். பத்திரிகையாளர்கள், விஞ்ஞானிகள் எனப் பலரும் புதின் அரசுக்கு எதிராகக் கூட்டாகக் கண்டன அறிக்கை வெளியிட்டுவருகின்றனர்.

இந்நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த டிவி ரெயின் (டோஷ்ட்) எனும் சுயாதீன தொலைக்காட்சி சேனலில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகப் பணியிலிருந்து விலகியிருக்கிறார்கள். அதுவும் இதுதான் கடைசி ஒளிபரப்பு என நேரலையில் அறிவித்தே ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

இந்தச் சேனலின் நிறுவனர்களில் ஒருவரான நடாலியா சிந்தேயேவா, “போர் வேண்டாம்” என்று சொல்லி தனது ஊழியர்களுடன் ஸ்டுடியோவிலிருந்து வெளிநடப்பு செய்த காட்சிகள் இணையத்தில் வைரலாகியிருக்கின்றன. இந்தச் சேனல் தனது இயக்கத்தை காலவரையின்றி நிறுத்திவைப்பதாக அறிக்கையும் வெளியிட்டிருக்கிறது.

லிங்க்டுஇன் சமூகவலைத்தில் எழுத்தாளர் டேனியல் ஆபிரஹாம்ஸ் இந்தக் காணொலியைப் பகிர்ந்திருக்கிறார்.

சேனல் ஸ்டுடியோவிலிருந்து ஊழியர்கள் வெளியேறிய பின்னர், ‘ஸ்வான் லேன்’ எனும் இசைக்கோர்வைக்குப் பெண்கள் பாலே நடனம் ஆடும் காட்சி ஒளிபரப்பப்பட்டது. 1991-ல் சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோது அரசுத் தொலைக்காட்சிகளில் அந்த நடனக்காட்சிதான் ஒளிபரப்பானது. புகழ்பெற்ற இசைமேதை சைகாவ்ஸ்கி உருவாக்கிய இசைக்கோவை அது.

அதேபோல, எக்கோ மோஸ்க்வி எனும், வானொலி நிலையமும் தனது இயக்கத்தை நிறுத்தியிருக்கிறது. ரஷ்யாவில் மிச்சம் இருக்கும் சுயாதீன ஊடகங்களில் ஒன்றான எக்கோ மோக்ஸ்வி, உக்ரைன் போர் தொடர்பான செய்திகளை ஒலிபரப்பக்கூடாது என்று தொடர்ந்து அழுத்தம் வந்தது தெரியவந்திருக்கிறது.

உக்ரைன் போர் தொடர்பான செய்திகள் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படக் கூடாது என்பதில் புதின் அரசு மிகுந்த கண்டிப்பு காட்டுகிறது. ஊடகச் சுதந்திரத்தின் மீதும் உண்மையின் மீதும் ரஷ்யா முழு அளவிலான போரைக் கட்டவிழ்த்துவிட்டிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சில தனியார் ஊடகங்களைத் தவிர, ரஷ்யாவின் ஊடகங்கள், குறிப்பாக அரசு ஊடகங்கள் அரசுக்கு ஆதரவான தகவல்களை மட்டுமே வெளியிடுகின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மூலம்தான் ரஷ்யர்கள் உக்ரைன் போர் குறித்த ஓரளவு நம்பகமான செய்திகளைப் பெறுகிறார்கள். ரஷ்ய அரசு அதிலும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர முயற்சிப்பதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE