ரஷ்யப் படைகளின் தாக்குதலால் அணு உலையில் தீ: செர்னோபிலைப் போல 10 மடங்கு ஆபத்து!

By காமதேனு

உக்ரனில் உள்ள ஸாப்போரிஸியா அணு உலை மீது ரஷ்யப் படைகள் நடத்திய தொடர் தாக்குதலில் அந்த அணு உலையில் தீப்பற்றியிருக்கிறது. ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு உலையான ஸாப்போரிஸியா உலையில் தீப்பற்றியிருப்பது உக்ரைனை உச்சகட்டப் பதற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தென்கிழக்கு உக்ரைனில் அமைந்திருக்கிறது ஸாப்போரிஸியா அணு உலை. அந்நாட்டின் அணுசக்தி உற்பத்தியில் அந்த அணு உலையின் பங்கு 40 சதவீதம் ஆகும்.

இதுவரையில் ஸாப்போரிஸியா அணு உலையின் கதிர்வீச்சின் அளவில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. அணு உலை வளாகத்தில் உள்ள உலைகள் பாதுகாப்பாக இருக்கிறது என்றும், ரஷ்யப் படைகளின் தாக்குதலின் விளைவாக ஏற்பட்ட தீயால் முக்கியமான சாதனங்கள் பாதிக்கப்படவில்லை என்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். எனினும், அணு உலையில் வெடிப்புகள் ஏற்பட்டால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்.

ஸாப்போரிஸியா அணு உலைக்கு பாதிப்பு ஏற்பட்டால், செர்னோபில் அணு உலை விபத்தைப் போல 10 மடங்கு மோசமான பாதிப்பு ஏற்படும் என உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் த்மைத்ரோ குலேபா கூறியிருக்கிறார்.

இதுகுறித்துக் காணொலி மூலம் உரையாற்றியிருக்கும் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி, “ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு உலையில் தீப்பற்றியிருக்கிறது. ரஷ்ய டாங்குகள் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கின்றன. ஏதேனும் வெடிப்பு ஏற்பட்டால், அது நம் அனைவருக்குமான முடிவாக இருக்கும். ஐரோப்பாவுக்கு முடிவை ஏற்படுத்திவிடும். ஐரோப்பாவிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். ஐரோப்பா உடனடியாக நடவடிக்கை எடுத்தால்தான், அணு உலையில் பேரழிவு ஏற்பட்டு, ஐரோப்பாவில் மரணங்கள் நிகழ்வதைத் தடுக்க முடியும்” என்றார். ரஷ்யா அணுசக்தி பயங்கரவாதத்தை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

அணு உலை மீதான ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

உக்ரைனின் அணு உலைகளில் எந்த நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என ரஷ்யாவை ஐநா சர்வதேச அணுசக்தி அமைப்பு எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE