ரியாத்: நடப்பாண்டில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட இந்தியர்களில் சுமார் 90 பேர் கடும் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை வெப்பத்தினால் சுமார் 645 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து சவுதி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஹஜ் யாத்திரை மேற்கொண்ட இந்தியர்களில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். வயோதிகம், வெப்பத்தின் தாக்கம் உள்ளிட்ட காரணத்தால் இவர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யாத்திரை மேற்கொண்ட இந்தியர்கள் பலரை காணவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட 18 லட்சம் பேரில் சுமார் 550 பேர் உயிரிழந்ததாக சவுதி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அங்கு வெப்பம் 50 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு யாத்திரையின் போது வெப்பம் காரணமாக சுமார் 200 பேர் உயிரிழந்தனர். 2,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஹஜ் புனித யாத்திரைக்கு விசா எடுக்க செலவிட முடியாத மக்கள், முறைப்படி பதிவு செய்யாமல் பல்வேறு வழிகளில் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதும் உயிரிழப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது. ஏனெனில், முறைப்படி விசா எடுத்து வரும் மக்களுக்கு குளிர்சாதன வசதி உட்பட வேண்டிய அனைத்து வசதிகளையும் சவுதி அரசு ஏற்பாடு செய்கிறது.
» ஜி-7 மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர், பிரான்ஸ், உக்ரைன் நாட்டு அதிபர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
» குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 40 இந்தியர்கள் உட்பட 49 பேர் உயிரிழப்பு
முறைப்படி பதிவு செய்யாத மக்கள் நீண்ட நேரம் வெயிலில் இருந்த காரணத்தாலும், உணவு, நீர், குளிர்சாதன வசதி மற்றும் முறையான தங்கும் வசதி இல்லாதது போன்ற பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய மக்கள் தங்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் சவுதி அரேபியாவின் மெக்கா மதினாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.