உக்ரைன் பதற்றத்துக்கு நடுவே ரஷ்யாவிலிருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்கள்!

By காமதேனு

ரஷ்யாவின் கொடூரத் தாக்குதலுக்கு உக்ரைன் இலக்காகியிருக்கும் நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தொடங்கிய ‘ஆபரேஷன் கங்கா’ நடவடிக்கை மூலம் மீட்கப்பட்டுவருகிறார்கள். எனினும், ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேற முடியாமல் பெரும் இன்னல்களை எதிர்கொண்டிருகிறார்கள். உக்ரைனியர்களால் இந்திய மாணவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருப்பதாக ரஷ்யா வெளியிட்ட தகவல் பெரும் பீதியைக் கிளப்பியிருந்த நிலையில், அந்தத் தகவலை இந்தியா மறுத்திருக்கிறது.

உக்ரைனில்தான் தாக்குதல் நடத்தப்படுகிறது என்றாலும், பதிலடியாக ரஷ்யாவின் மீது நேட்டோ நாடுகள் தாக்குதலைத் தொடங்குமா எனும் எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. அணு சக்திப் படையைத் தயாராக வைத்திருக்குமாறு ரஷ்ய அதிபர் புதின் கூறியிருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரஷ்யாவில் பயின்றுவரும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கவலை பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களின் நிலை, ரஷ்யாவில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று அவர்கள் கருதுகிறார்கள்.

இந்நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யாவில் பயின்றுவரும் இந்திய மாணவர்களும் நாடு திரும்பத் தொடங்கியிருக்கின்றனர். ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு பயின்றுவரும் பல மாணவர்கள் அந்நாட்டிலிருந்து விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

ரஷ்யாவில் உக்ரைன் போருக்கு எதிராக அந்நாட்டைச் சேர்ந்த பலரும் எதிர்க்குரல் எழுப்பிவருகிறார்கள். அதேவேளையில் அங்கு போர்ச்சூழல், ராணுவ நடமாட்டம் போன்ற அச்சுறுத்தல்கள் இல்லை. எனினும், இந்தியாவில் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்த கவலையால், எப்படியாவது நாடு திரும்புமாறு அவர்களை வலியுறுத்திவருகிறார்கள். இந்தச் சூழலில், ரஷ்யாவிலிருந்து நாடு திரும்பியிருக்கும் இந்திய மாணவர்கள், உக்ரைன் போர் முடிவுக்கு வந்ததும் மீண்டும் ரஷ்யா திரும்ப விரும்புவதாகவே கூறியிருக்கிறார்கள்.

உக்ரைனின் கார்கிவ் நகரில் கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர் நவீன் குமார் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, நேற்று பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், இந்திய மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது குறித்துப் பேசியிருந்தார். கிழக்கு உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை ரஷ்ய நிலப்பகுதி வழியாக அழைத்துவருவது குறித்து ரஷ்யத் தூதர் டெனிஸ் அலிபோவும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE