உக்ரைன் போர்: உறுதியானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை!

By காமதேனு

உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யா அந்நாட்டில் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) விசாரணை தொடங்குவது உறுதியாகிவிட்டது.

பிப்ரவரி 28-ம் தேதி, இதுகுறித்து பேசியிருந்த ஐசிசி தலைமை வழக்கறிஞர் கரீம் அகமது கான் கியூசி, உக்ரைன் நிலவரம் தொடர்பாக, எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரணை நடத்த முடிவெடுத்திருப்பதாகக் கூறியிருந்தார். “சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ‘ரோம் சிலை’ ஒப்பந்தத்தில் உக்ரைன் இடம்பெறவில்லை. எனவே, உக்ரைன் நிலவரம் தொடர்பாக நானாகச் சென்று பரிந்துரைக்க முடியாது. ஆனால், ‘ரோம் சிலை’ குறிப்பிடும் குற்றங்கள் (இனப்படுகொலை, மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குற்றம்) தனது நாட்டில் நடந்திருப்பது தொடர்பாக சிறப்புரிமை அடிப்படையில் விசாரணை நடத்துமாறு இரண்டு முறை உக்ரைன் கேட்டுக்கொண்டிருக்கிறது” என்று அவர் கூறியிருந்தார். “உக்ரைனில் ரஷ்யா போர்க்குற்றம் நிகழ்த்தியிருக்கும் என்பதற்கான நியாயமான அடிப்படைக் காரணங்கள் இருப்பதாக நம்புகிறேன்” என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்ட கரீம் அகமது கான், “உக்ரைன் நிலவரம் குறித்து உடனடியாக விசாரணையைத் தொடங்குவது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத் தலைமைக்குச் சில மாதங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

ஐசிசி தலைமை வழக்கறிஞர் கரீம் அகமது கான்

ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அதிபர் விக்டர் யானுகோவிச் ஆட்சிக்காலத்தில், உக்ரைன் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களின்போது நடந்த குற்றங்கள் குறித்தும் விசாரணை நடைபெறும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட 39 நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE