ஒலிம்பிக் முடியும் வரை ஊடுருவலைத் தள்ளிவைக்க சீனா கேட்டுக்கொண்டதா?

By காமதேனு

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்துவந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 20-ல் நிறைவடைந்தன. போட்டிகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில், உக்ரைன் எல்லையில் ரஷ்யப் படைகள் போருக்குத் தயாராகவே காத்திருந்தன. போட்டிகள் நிறைவுறுவதற்கு முன்னதாக ஊடுருவல் நிகழலாம் என ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறியிருந்தார். அதேவேளையில், நெருங்கிய நட்பு நாடான சீனாவுக்குத் தர்மசங்கடம் ஏற்படுத்தாத வகையில், பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பின்னரே உக்ரைன் மீது புதின் தாக்குதல் தொடுப்பார் எனக் கணிக்கப்பட்டது. போட்டிகள் முடியும் வரை தாக்குதலில் இறங்க வேண்டாம் என்று ரஷ்யாவிடம் சீனா கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அந்தக் கணிப்பு உண்மைதான் என்கிறது ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழில் செய்தி.

ரஷ்ய அதிகாரிகளிடம் சீன அதிகாரிகள் இதுதொடர்பாகப் பேசியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அரசு அதிகாரிகள் இதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளின் உளவுத் தகவல்களை அடிப்படையாக வைத்து இந்தக் கருத்தை ஐரோப்பிய அதிகாரி ஒருவரும் ஆமோதித்திருக்கிறார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் திட்டங்கள் குறித்து சீன உளவுத் துறை உயரதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தது என்றும், ‘தி நியூயார்க் டைம்ஸ்’ செய்தி குறிப்பிடுகிறது.

ரஷ்யாவிடம் அப்படியான ஒரு கோரிக்கையை சீனா வைத்ததாக இவ்விவகாரம் தொடர்பாக நன்கு அறிந்த ஒரு வட்டாரம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறது. எனினும், மிகவும் முக்கியமான விவகாரம் என்பதால், தங்களைப் பற்றிய விவரங்கள் எதையும் வெளியிட அந்த வட்டாரம் முன்வரவில்லை.

இந்தச் செய்திகளை அமெரிக்காவுக்கான சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லியூ பெங்க்யூ மறுத்திருக்கிறார். “இந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாதங்கள், அடிப்படை ஆதாரம் இல்லாத வெற்று ஊகங்கள். சீனாவின் மீது பழி சுமத்துவதற்காக இவ்வாறு சொல்லப்படுகிறது” என்று அவர் கூறியிருக்கிறார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம், சிஐஏ, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றிடமிருந்து தற்போது இதுகுறித்து எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.

சீன அதிகாரிகளுக்கும், ரஷ்ய அதிகாரிகளுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றம் குறித்த விவரங்களை மேற்கத்திய நாடுகளின் உளவு அமைப்பு ஒன்று சேகரித்ததாகவும், அது நம்பகமான தகவல் என அதிகாரிகள் கருதுவதாகவும் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ செய்தி தெரிவிக்கிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் குறித்து கவனமான நிலைப்பாட்டை சீனா கொண்டிருக்கிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் சீனா தவிர்த்துவிட்டது. உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா உடனே நிறுத்த வலியுறுத்தி ஐநா பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பையும் சீனா புறக்கணித்துவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE