ரஷ்யாவின் இணைய பயன்பாட்டை முடக்கக் கோரும் உக்ரைன்: நியாயமான கோரிக்கையா?

By காமதேனு

ரஷ்யா நடத்திவரும் தாக்குதலுக்கு அந்நாட்டு மக்கள் விலை கொடுத்தாக வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு உக்கிரமடைந்திருக்கிறது உக்ரைன். இணைய உலகத்திலிருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் எனும் கோரிக்கையை உக்ரைன் முன்வைத்திருப்பதே அதற்கு சாட்சி.

இணையதள பெயர்கள், எண்கள் மற்றும் தரவுகள் போன்றவற்றை நிர்வகிக்கும் சர்வதேச அமைப்பான ஐசிஏஎன்என் அமைப்புக்கு நேற்று (மார்ச் 1) உக்ரைன் டிஜிட்டல் தகவல் துறை துணை அமைச்சர் மிகையிலோ ஃபெடோரோவ் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். ரஷ்யா நிகழ்த்திவரும் கொடூரக் குற்றங்கள், ஜெனிவா ஒப்பந்தத்தை மீறி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து நடத்தும் தாக்குதல்கள் ஆகியவற்றை அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், ரஷ்யாவின் பிரச்சார அமைப்பு ஏற்படுத்திய பாதிப்புகளின் விளைவே இந்தப் போர்க் குற்றங்கள் எனக் கூறியிருக்கிறார். ரஷ்யா மேற்கொண்ட சைபர் தாக்குதல்களின் காரணமாக உக்ரைனியர்கள் மற்றும் உக்ரைன் அரசின் தகவல் தொடர்பில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், .ru மற்றும் .su என முடியும் ரஷ்ய இணையதளங்களை நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ முடக்க வேண்டும் என்றும், மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்கிலிருந்து செயல்படும் சர்வர்களை முடக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

“போரின் விலை என்ன என்பதை ரஷ்யக் குடிமக்கள் உணர வேண்டும்” என்று உக்ரைன் அரசின் செய்தித் தொடர்பாளர் ஒலெக்ஸாண்டர் ரைஷென்கோ கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக, ஐசிஏஎன்என் உடனடியாக எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. எனினும், ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்துக்கான இணையதள பெயர்களுக்கு அனுமதி வழங்கும் அமைப்பான ரைப் என்சிசி இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

‘உள்நாட்டுப் பிரச்சினைகள், சர்வதேச மோதல்கள் அல்லது போர்கள் காரணமாகத் தகவல் தொடர்பு பாதிக்கப்படக் கூடாது’ என்று ரைப் அமைப்பின் செயற்குழு தனது உறுப்பினர்களுக்கு அனுப்பியிருக்கும் மின்னஞ்சலில் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இணையத்திலிருந்து ரஷ்யாவை விலக்கிவைப்பது என்பது ரஷ்ய ஹேக்கர்களுக்கெல்லாம் ஒரு விஷயமாகவே இருக்காது என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். காரணம், அவர்களால் உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெவ்வேறு இணைய களங்களை ( internet domains) பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இன்றைக்கு உலகமே இணையத்தால் பிணைக்கப்பட்டிருக்கும்போது, ஒரு நாட்டின் இணையத் தொடர்புகளை முடக்குவது நியாயமாகாது. அதுமட்டுமல்ல, ஒருவேளை ரஷ்யாவின் இணையம் முடக்கப்பட்டால் உக்ரைன் போருக்கு தார்மிக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யக் குடிமக்கள் பலரும் அதில் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE